எகிப்தில் பெருந்தொற்று நெருக்கடி: ஆசிரியராக மாறிய 12 வயதுச் சிறுமி

எகிப்தில் பெருந்தொற்று நெருக்கடி: ஆசிரியராக மாறிய 12 வயதுச் சிறுமி
Updated on
1 min read

எகிப்து நாட்டில் கரோனா பெருந்தொற்று நெருக்கடியால் 12 வயதுச் சிறுமி ஆசிரியராக மாறி, கற்பித்து வருவது அனைவரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

எகிப்து, கெய்ரோ பகுதியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அட்மிடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரீம் எல் கவ்லி. 12 வயதுச் சிறுமியான அவர், தனது கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியராக மாறிப் பாடங்களைக் கற்பித்து வருகிறார். தினந்தோறும் சுமார் 30 குழந்தைகள் இவரிடம் பாடம் கற்று வருகின்றனர்.

இதுகுறித்து ரீம் கூறும்போது, ''கரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. குழந்தைகள் தெருவில் விளையாடுவதற்கு பதிலாக நாம் அவர்களுக்குக் கற்பிக்கலாமே என்று நினைத்தேன்.

தினந்தோறும் அதிகாலையில் எழுந்து, தொழுதுவிட்டு, அருகில் உள்ள குழந்தைகளுக்கு அரபி, கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்பிப்பேன். ஆரம்பத்தில் நோட்டுப் புத்தகத்தில் கற்பித்தேன். கரும்பலகை கிடைத்த பிறகு அதில் சொல்லிக் கொடுத்தேன். இப்போது உள்ளூர் நிறுவனம் மூலம் வெள்ளைப் பலகையும் மார்க்கர் பேனாக்களும் கிடைத்துள்ளன. அவற்றின் மூலம் தற்போது கற்பித்து வருகிறேன்.

பெரியவளாகி, கணித ஆசிரியராகப் பணியாற்ற ஆசை. ஆரம்பத்தில் என்னுடைய சத்தம் உரத்துக் கேட்கும் என்பதால் அம்மாவுக்கு நான் கற்பிப்பதில் ஆர்வமில்லை. ஆனால், குழந்தைகள் கற்று பலனடைவதைப் பார்த்தவர், நான் விரும்பும் வரை பாடம் எடுக்கலாம் என்று உற்சாகப்படுத்தினார்'' என்று தெரிவித்தார்.

12 வயது ஆசிரியர் ரீம் எல் கவ்லி கற்பிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in