தன் கேள்விகளுக்கு பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு அளித்து உற்சாகப்படுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குகிறார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி.
புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குகிறார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி.
Updated on
1 min read

தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மக்களிடம் சென்றடைந்துள்ளனவா என்பதை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட ராப்பூசல் அரசுப் பள்ளி மாணவர்களிடம் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேள்வி கேட்டு உறுதி செய்தார்.

ராப்பூசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப். 13) நடைபெற்றது. இந்த விழாவில் ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, மாணவ, மாணவிகளிடம் ஏராளமான கேள்விகளை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டார்.

"தமிழகத்தில் ஊரடங்கு உள்ளதா, பிற நாடுகள், மாநிலங்களில் ஊடங்கு உள்ளதா, கரோனாவுக்கு எத்தனை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, என்னென்ன தடுப்பூசிகள், தடுப்பூசியை நான் போட்டுக்கொண்டேனா, ஆட்சியர் போட்டுக்கொண்டாரா, யார் யாருக்கெல்லம் போடப்பட்டு வருகிறது,. நான் எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டேன், ஏன் அதை போட்டுக்கொண்டேன் தெரியுமா" என கேட்டார்.

மேலும், "தமிழகத்தில் இதுவரை எத்தனை பேர் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வரவுள்ள புதிய திட்டம் என்னவென்று தெரியுமா, விராலிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் எப்போது? அனைவரும் செய்தித்தாள் வாசிக்கிறீர்களா" எனவும் கேட்டார்.

அத்துடன், "விராலிமலை தொகுதியில் பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், முதியவர்களுக்கு மூக்குக் கண்ணாடி முகாம் நடப்பது தெரியுமா, புதுக்கோட்டையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்லூரி எது" என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டார்.

இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு அளித்து, அவர்களை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உற்சாகப்படுத்தினார். இவ்வாறு, அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொண்டிருக்கிறார்களா என்பது குறித்து அனைத்து கேள்விகளுக்கும் மாணவ, மாணவிகள் பதிலளித்ததை அறிந்து அவரும் உற்சாகம் அடைந்ததாக அங்கிருந்தோர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in