

அரியர் மாணவர்களுக்கான பொறியியல் தேர்வுக் கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில், கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர பிற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக இருந்தது
இதற்கிடையே அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆகியவற்றின் விதிகளுக்கு முரணானது என்று ஏஐசிடிஇ எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கான பொறியியல் தேர்வுக் கால அட்டவணையை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. முதல்கட்டமான அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரிக்கான அரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தேர்வுகள் பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகின்றன. பிற பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான அரியர் தேர்வுக் கால அட்டவணையைக் காண: https://acoe.annauniv.edu/Home/ug_tt