பணி நிரந்தரம் வழங்குக: பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் தொடர் போராட்டம்

பணி நிரந்தரம் வழங்குக: பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் தொடர் போராட்டம்
Updated on
1 min read

பணி நிரந்தரம் வழங்கக் கோரி, பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சென்னையில் தொடர் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.

தமிழக அரசுப் பள்ளிகளில் கல்விசார் இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் 12,483 பேர் பகுதி நேரச் சிறப்பாசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர்.

ஓவியம், தையல், இசை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பாடங்களை இவர்கள் கற்பித்து வருகின்றனர். வாரம் இரண்டு நாட்கள் பணியுடன், மாதம் ரூ.7,700 ரூபாய் சம்பளம் பெற்று வந்தனர்.

அண்மையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை ரூ.7,700-ல் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தித் தமிழக அரசு அறிவித்தது. வாரத்தில் மூன்று நாட்கள் முழுவதுமாக பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பகுதி நேரப் பயிற்றுநர்கள் பணிபுரியும் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வழங்கும் கால அட்டவணைப்படி, பகுதி நேர ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பகுதி நேரச் சிறப்பாசிரியர்களுக்குத் தொகுப்பூதியத்துக்குப் பதிலாக பணி நிரந்தரம்தான் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். இதற்காகத் தொடர் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். சென்னை டிபிஐ வளாகத்தில், கடந்த 4-ம் தேதி முதல் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. பணி நிரந்தரம் வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அனைத்துப் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in