Published : 05 Feb 2021 01:43 PM
Last Updated : 05 Feb 2021 01:43 PM

அண்ணா பல்கலை. துணைவேந்தர் மீதான விசாரணை ஆணையத்துக்குக் கால நீட்டிப்பு கூடாது: ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

கலையரசன் ஆணையத்துக்குக் கால நீட்டிப்பு எதையும் வழங்காமல், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீதான விசாரணையைத் திரும்பப் பெற வேண்டுமென அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டு, நவ.11 முதல் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சூரப்பா மீது புகார் தந்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே விசாரணையில் கால நீட்டிப்புக் கேட்க நீதிபதி கலையரசன் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கத் தலைவர் ஐ.அருள் அறம், செயலாளர் எஸ்.சந்திரமோகன் ஆகியோர் இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

''அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர்.எம்.கே.சூரப்பா மீது எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி எழுதப்பட்ட அனாமதேயக் கடிதங்களில் கண்ட அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்குக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு உத்தரவிட்டது.

குற்றச்சாட்டு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் ஆணையம் தொடர் விசாரணைகளை நடத்தியும், சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் எவ்வித முகாந்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை. கரோனா முழு அடைப்புகளுக்குப் பிந்தைய கல்விப் பணியில் கவனம் செலுத்த வேண்டிய ஆசிரியர்களின் முழு கவனமும் இந்த விசாரணையின் மூலம் திசை திருப்பப்பட்டு, தொய்வு நிலையிலேயே உள்ளது. விசாரணைக்குத் தொடர்பில்லாத விவரங்களைக் கேட்டு, ஆசிரியர்களின் காலத்தை விரயம் செய்வதன் மூலம், கல்வியின் மீதான கவனமும் சிதறடிக்கப்படுகிறது.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாத காலக் கெடுவுக்குள், துணைவேந்தரின் நேர்மையைச் சந்தேகிக்கும் வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லாத பட்சத்தில், விசாரணை ஆணையத்தின் காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பது என்பது, கல்வியாளர்கள் அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்வதோடு, அண்ணா பல்கலைக்கழகத்தின் மாண்பை நாமே சிதைப்பது போலாகும்.

விசாரணை என்ற பெயரில் பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது விரும்பத்தக்கதல்ல. உலக அரங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழை உச்சிக்குக் கொண்டு செல்ல அரசின் ஆதரவு மிக முக்கியமானது.

இதை மனதில் கொண்டு, கலையரசன் ஆணையத்துக்குக் கால நீட்டிப்பு எதையும் வழங்காமல், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீதான விசாரணையைத் திரும்பப் பெற வேண்டுமென அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x