Last Updated : 01 Feb, 2021 03:34 PM

 

Published : 01 Feb 2021 03:34 PM
Last Updated : 01 Feb 2021 03:34 PM

மலர்களைக் கொண்டு கணிதம்: மாணவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்

 மலர்களால் கணிதக் கருத்துகளை அமைத்துப் பாடம் நடத்தும் ஆசிரியர் சு.சுரேஷ்

காரைக்கால்

கணிதப் பாடத்தின் மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக, காரைக்கால், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் மலர்களைக் கொண்டு கற்பிக்கும் முயற்சியைக் கையாண்டு வருகிறார்.

மாணவர்களுக்குக் கணக்குப் பாடத்தில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கணித ஓவியப் போட்டி, கணித பாட்டுப் போட்டி, கணிதக் கண்காட்சி, கணிதப் பட்டறை, பெருக்கல் வாய்ப்பாடு ஒப்புவிக்கும் போட்டி, நாடகம் மூலம் கணிதம் கற்பித்தல் எனப் பலவித முயற்சிகளைப் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் ஆசிரியர் சுரேஷ். இவர் தற்போது மலர்களைக் கொண்டு கணிதம் கற்பிக்கும் முயற்சியை புதிதாக மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்துக் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி கணித ஆசிரியர் சு.சுரேஷ் இந்து தமிழ் இணையதளத்திடம் கூறியதாவது:

”மாணவர்களுக்கு அனுபவப்பூர்வமாக, எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கணிதப் பாடத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அவ்வப்போது பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாக எங்கள் வீட்டில் அதிக அளவில் பூக்கும் பவள மல்லிப் பூக்களை கொண்டு கணிதக் கருத்துருக்களை அமைத்து மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்.

இப்பூக்கள் மூலம் கணிதம் சார்ந்த ஓவியங்களை அமைத்து, அதன் மூலம் மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது ஒரு வித நாட்டத்தை ஏற்படுத்த முடியும் என எனக்குத் தோன்றியது. அதன் அடிப்படையில் பவள மல்லி மற்றும் சில வண்ணப் பூக்களாகிய அரளி, சங்குப் பூக்களையும் பயன்படுத்திக் கணிதக் கருத்துக்களை வரைந்து, அதனை மினி புரொஜெக்டர் மூலம் வகுப்பில் காண்பித்தேன். அதனைக் கண்ட 10-ம் வகுப்பு மாணவர்களின் முகத்தில் ஒருவித மலர்ச்சியைக் காண முடிந்தது.

மலர்களால் அமைக்கப்பட்ட கணிதக் கருத்துருக்கள்

மாணவர்களிடம் நல்ல வரவேற்பும், கணிதக் கருத்துருக்களைக் கற்கும் ஆர்வமும் உண்டானது. அதனால் அம்முறையைத் தற்போது கற்பித்தலில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். மாணவர்களுக்கு கணிதப் பாடம் என்றாலே சற்று தயக்கம் ஏற்படுவதுண்டு. ஆனால் இதுபோன்ற சிறு சிறு புதிய முயற்சிகளை அவ்வப்போது மேற்கொள்வதால், எனது வகுப்பில் மாணவர்கள் மகிழ்ச்சியாக கணிதப் பாடம் கற்கின்றனர்.

கணிதக் கருத்துருக்கள் (Mathametical concepts), காட்சி மற்றும் செயல் வடிவத்தைக் கொண்டு கற்பிக்கும்போது மாணவர்கள், புரிதலோடு கணிதப் பாடத்தைக் கற்கிறார்கள்” என்று ஆசிரியர் சு.சுரேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x