கிராமப்புற இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பள்ளி மாணவர்கள்: பொருளாதார ஆய்வு சொல்வது என்ன?

கிராமப்புற இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பள்ளி மாணவர்கள்: பொருளாதார ஆய்வு சொல்வது என்ன?
Updated on
1 min read

கிராமப்புற இந்தியாவில் சொந்தமாக ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 61 சதவீதமாக அதிகரித்துள்ளதாக 2020- 21ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு தெரிவித்துள்ளது. இதை முறையாகப் பயன்படுத்தினால், கல்வித் துறையில் நிலவும் சமத்துவமின்மை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2020- 21ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

''இணைய வசதி, கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களை அணுகுவதில் தற்போது முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தொலைதூரக் கற்றல் மற்றும் வீட்டில் இருந்து வேலை ஆகியவற்றால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

கிராமப்புற இந்தியாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சொந்தமாக ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் சதவீதம் 2018-ல் 36.5% ஆக இருந்தது. இது 2020-ம் ஆண்டில் 61.8% ஆக உயர்ந்துள்ளது.

இதை முறையாகப் பயன்படுத்தினால் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பாலினம், வயது மற்றும் வருமானக் குழுக்களுக்கு இடையில் உள்ள டிஜிட்டல் பிளவும் சமத்துவமின்மையும் கணிசமாகக் குறையும்.

நாட்டில் கல்வியறிவைப் பொறுத்தவரையில், தொடக்கப் பள்ளி அளவில் 96 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். 100 சதவீதக் கல்வியறிவை அடைய, நாடு 4 சதவீதம் பின்தங்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் உள்ள பெண்களின் கல்வியறிவு விகிதம் தேசியச் சராசரியை விடக் குறைவாக உள்ளது''.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in