Published : 29 Jan 2021 02:26 PM
Last Updated : 29 Jan 2021 02:26 PM

கர்நாடகாவில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுத் தேதிகள் அறிவிப்பு; ஜூன் 14-ல் தொடக்கம்

கர்நாடகாவில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதிகளை அம்மாநிலக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். இதன்படி ஜூன் 14-ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020-21 ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

கர்நாடகாவில் கரோனா பரவல் சற்று குறைந்ததால் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த நவம்பர் 18-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதேபோல 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நெருங்குவதால் கட்டாயம் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

இதைத் தொடர்ந்து பொதுத்தேர்வுத் தேதிகள் குறித்துப் பெற்றோர்களும் மாணவர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து 12-ம் வகுப்புத் தேர்வுகள் மே மாதம் இரண்டாவது வாரத்திலும் 10-ம் வகுப்புத் தேர்வுகள் ஜூன் முதல் வாரத்திலும் தொடங்கும் என்று அரசு அறிவித்தது.

இந்நிலையில் இதுகுறித்து ’ஏஎன்ஐ’ செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்நாடக மாநில் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், ''10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஜூன் 14-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைகின்றன. முன்னதாக இறுதிப் பாடத்திட்டம் குறித்த விவரங்கள் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டன.

1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தைக் குறைக்கக் கோரி இதுவரை எந்த வேண்டுகோளும் இதுவரை வைக்கப்படவில்லை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x