தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டியில் காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி: முதல்வர் நாராயணசாமி பாராட்டு

தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டியில் காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்கள் வெற்றி: முதல்வர் நாராயணசாமி பாராட்டு
Updated on
1 min read

மத்திய அரசின் தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களைப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பாராட்டி கவுரவித்தார்.

மத்தியக் கல்வி அமைச்சகம், இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரியக் கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் வாய்ப்பாட்டு இசை, கருவியிசை, நடனம், காண்கலை உள்ளிட்ட தலைப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான கலைப் போட்டிகளை (கலா உத்சவ்) நடத்தி வருகிறது.

அந்த வகையில் 2020- 21ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டிகள் கடந்த ஜன.11 முதல் 22-ம் தேதி வரை இணையவழியில் நடத்தப்பட்டன. இதில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 576 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சுவேதா பெண்கள் பிரிவிலும், மாணவர்கள் எஸ்.செல்வராகவன், ஏ.ஆகாஷ், எஸ்.அமுதன் ஆகியோர் ஆண்கள் பிரிவிலும், கிராமிய நடனப் போட்டியில் முதல் இடத்தைப் பெற்று மாநிலத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (ஜன.28) இரவு காரைக்கால் தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடபெற்ற விழாவில், கலா உத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர் பி.முருகன் ஆகியோரைப் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்டத் துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கே.கோவிந்தராஜ், முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து ஆசிரியர் பி.முருகன் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் இன்று (ஜன.29) கூறும்போது, ''புதுச்சேரியில் உள்ள ஜவஹர் பால்பவனில் இருந்து இணைய வழியில் இப்போட்டியில் கலந்துகொண்டோம். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் கலா உத்சவ் போட்டியில் இத்தகைய வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலம் வெற்றிப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in