Last Updated : 27 Jan, 2021 02:16 PM

 

Published : 27 Jan 2021 02:16 PM
Last Updated : 27 Jan 2021 02:16 PM

ஒருநாள் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றிய 13 வயதுச் சிறுமி

பிஹார்

பிஹாரைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி அஞ்சலி குமாரி, அங்குள்ள காவல் நிலையத்தில் ஒருநாள் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.

பால்லியா காவல் நிலையத்தில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் அவதேஷ் சரோஜ். அவரது முன்னெடுப்பை அடுத்து, குடியரசு தினத்தன்று பால்லியா காவல் நிலையத்தில் காவல்துறை ஆய்வாளராக ஒருநாள் முழுவதும் பணியாற்றியுள்ளார் அஞ்சலி.

கராத்தே போட்டியில் தலைசிறந்து விளங்கும் அஞ்சலி குமாரி, உள்ளூர் கராத்தே பயிற்சியாளராக விளங்கும் தன் தந்தையிடம் இருந்து கடந்த 6 ஆண்டுகளாகக் கராத்தே கற்று வருகிறார். பிஹார் மாநிலம் சார்பில் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

அஞ்சலி குமாரியின் சாதனைகள் குறித்துக் கேள்விப்பட்ட அவதேஷ் சரோஜ், தனது தலைமையின் கீழ் இயங்கும் பால்லியா காவல் நிலையத்தில், அவரை ஒரு நாள் காவல்துறை ஆய்வாளராகப் பணியில் அமர்த்தியுள்ளார். இதுகுறித்து சரோஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ’’திரைப்படம் ஒன்றில் போராட்டக்காரர் ஒருவர் ஒருநாள் முதல்வராக மாறி, மாநிலத்தின் நிலையையே மாற்றி அமைப்பார். அதேபோல் நாமும் முயற்சிக்கலாமே என்று தோன்றியது.

காவல்துறையில் பணியாற்ற இளைஞர்களை அமர்த்துவதன் மூலம் சமூகத்தில் முக்கியமான அடியை எடுத்து வைக்கிறோம்’’ என்று தெரிவித்தார். அப்போது துணை பிராந்திய அதிகாரி உத்தம் குமார், டிஎஸ்பி பிர் திரேந்திரா மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி விகாஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

காவல்துறை ஆய்வாளராக அஞ்சலி குமாரி பதவியேற்ற சில நிமிடங்களிலேயே பொதுமக்களில் ஒருவர், அருகிலுள்ள பள்ளி முன்பே ஏற்படும் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறித்துப் புகார் மனு அளித்தார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த சிறுமி அஞ்சலி, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்குக் குறிப்பு எழுதி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x