பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றிய திருநங்கை; திருச்சியில் தலைமை ஆசிரியருக்குப் பாராட்டு

பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றிய திருநங்கை; திருச்சியில் தலைமை ஆசிரியருக்குப் பாராட்டு
Updated on
1 min read

திருச்சி அருகே பள்ளியில் திருநங்கையைத் தேசியக் கொடி ஏற்ற வைத்த தலைமை ஆசிரியருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

நாடு முழுவதும் 72-வது குடியரசு தின விழா நேற்று (ஜன.26) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது‌. திருநங்கைகளுக்குச் சிறப்பு செய்யும் வகையில் திருச்சி மாவட்டம் தென்னூரில், சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் திருநங்கை ஒருவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

திருச்சி மாவட்டத் திட்ட அலுவலகத்தில், ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருபவர் திருநங்கை எம்.சினேகா. அவரைக் குடியரசு தினச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள, சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி சார்பில், தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமையில் அழைப்பு விடுக்கப்பட்டது.

விழாவில் திருநங்கை சினேகா தேசத் தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் தேசியக் கொடியினை ஏற்றினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ’’ஆசிரியர்கள்தான் நம் அனைவருக்கும் முன் உதாரணமாக விளங்கக் கூடியவர்கள். நாம் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தால் வாழ்வில் முன்னேறலாம். எங்களை போல உள்ளவர்களுக்கு இவ்வாய்ப்பு கிடைப்பது நாங்கள் மென்மேலும் தன்னம்பிக்கையுடன் அடுத்த இடத்திற்குச் செல்ல உதவும்’’ என்று திருநங்கை சினேகா தெரிவித்தார்.

முன்னதாகப் பள்ளி ஆசிரியை உமா வரவேற்க, பள்ளி ஆசிரியைகள் சரண்யா, சகாயராணி, உஷாராணி ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in