Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM

எழுந்து செல்லவோ, முகத்தை மூடவோ கூடாது; இணையவழி பொறியியல் தேர்வில் புதிய கட்டுப்பாடு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பிப்ரவரியில் இணைய வழியில் நடக்க உள்ள பொறியியல் பருவத் தேர்வு தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நவம்பர், டிசம்பரில் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் பிப்ரவரியில் நடக்க உள்ளன. இதற்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 15-ம் தேதி தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதில், பி.இ., பி.டெக்., பி.ஆர்க். உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வு பிப்ரவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இணையவழியில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே இணையவழியில் நடைபெற்ற தேர்வில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அதுபோல மீண்டும் ஏற்படாமல் இருக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பதிவு செய்ய வேண்டும்

அதன்படி, தேர்வு நடைபெறும் நேரத்துக்கு முன்பாக மாணவர்கள் தங்கள் கல்லூரி அடையாள அட்டையை (ஐடி கார்டு) வைத்து பதிவு செய்ய வேண்டும். தேர்வு எழுதப் பயன்படுத்தும் லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் ஆகிய சாதனங்களை 2 மணி நேரம் ஆனில் இருக்கும்படி முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வெப் கேமராவில் முகம் தெளிவாக தெரிந்துகொண்டே இருக்கவேண்டும். தேர்வு தொடர்பான தோராயமான வழிமுறைகளை (Rough work) செய்ய ஏ4 காகிதங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டு இருக்கையைவிட்டு எழுந்து செல்லக் கூடாது.

சத்தமாக வாசிக்கக் கூடாது

அதேபோல, முகக் கவசம் போன்றவற்றை வைத்து முகத்தை மூடக் கூடாது. கேள்விகளை சத்தமாக வாசிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாக பின்பற்றாத மாணவர்களை தண்டிக்க நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x