Published : 23 Jan 2021 05:53 PM
Last Updated : 23 Jan 2021 05:53 PM

பழநி அருகே ஆசிரியைக்கு கரோனா தொற்று: அரசு உயர்நிலைப் பள்ளி மறுதேதி குறிப்பிடாமல் மூடல்

பழநி  

பழநி அருகே சின்னகாந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பள்ளி மூடப்பட்டது.

தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இருமல், சளி போன்ற தொந்தரவு இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று சேலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு கரோனா உறுதியானது. ஆனால், நல்வாய்ப்பாக பள்ளியில் பயின்ற மற்ற மாணவியருக்கோ ஆசிரியர்களுக்கோ தொற்று உறுதியாகவில்லை. இதனையடுத்து, பள்ளி வளாகம் முழுமையாக சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இச்சம்பவம் ஏற்படுத்திய அச்ச உணர்வு விலகுவதற்குள் இன்று பழநி அருகே சின்னகாந்திபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மறுதேதி குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ளது சின்னகாந்திபுரம் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

பழநியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க பள்ளிக்கு வந்து சென்றுள்ளார். இவரது கணவருக்கு கரோனா தொற்று இருப்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆசிரியைக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பள்ளிக்கு வந்த ஆசிரியைக்கு கரோனா உள்ளது என பரிசோதனை முடிவு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்கள், 20 பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்கு உடனடியாக கரோனா பரிசோதனையை மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.

பள்ளி வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு பள்ளி மறுதேதி குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x