Last Updated : 19 Jan, 2021 03:34 PM

 

Published : 19 Jan 2021 03:34 PM
Last Updated : 19 Jan 2021 03:34 PM

திருச்சியில் பெட்டி, படுக்கைகளுடன் உற்சாகமாகப் பள்ளிகளுக்கு வந்த விடுதி மாணவர்கள்

திருச்சி பெரிய மிளகுபாறை அரசு ஆதி திராவிடர்நல மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் வெப்பநிலையைப் பரிசோதித்து, கைகளுக்குக் கிருமிநாசினி தெளிக்கும் ஆசிரியர்கள்.

திருச்சி

தமிழ்நாட்டில் 10 மாதங்களுக்குப் பிறகு, 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ மாணவிகள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பள்ளிக்கு வந்தனர்.

முன்னதாக, பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு நோய்ப் பரவல் நேரிடாமல் தடுக்கும் வகையில் உரிய இடைவெளியைப் பேணும் வகையில் வகுப்புக்குத் தலா 25 பேர் வீதம் மட்டுமே அமர வைக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது. பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர், கல்வித் துறை அலுவலர்கள் ஏற்கெனவே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உறுதி செய்தனர். மாணவ- மாணவிகள் அமரவுள்ள வகுப்புகள் கிருமிநாசினி மூலம் தூய்மை செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும், வெப்பநிலையைப் பரிசோதிக்க வெப்பமானி, முகக்கவசங்கள் மற்றும் கைகளைக் கழுவ உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி, முசிறி, லால்குடி, மணப்பாறை ஆகிய 4 கல்வி மாவட்டங்களில் உள்ள 506 பள்ளிகளில் 10, 12 ஆகிய 2 வகுப்புகளில் சுமார் 75,000 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், விரும்பும் மாணவர்கள் அவரவர் பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன்தான் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மாணவ- மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பள்ளிகளுக்கு வருவதைக் காண முடிந்தது. விடுதி மாணவ- மாணவிகள் பெட்டி, படுக்கைகளுடன் வந்து சேர்ந்தனர். சில தனியார் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

அனைத்துப் பள்ளிகளிலும் வெப்பமானி மூலம் பரிசோதித்து, காய்ச்சல் இல்லை என்பதை உறுதி செய்து, கைகளில் கிருமிநாசினி மருந்து தெளித்து அதன்பிறகே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக கல்வித் துறை அலுவலர்கள் கூறும்போது, “சுமார் 300 நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு அரசின் அறிவுறுத்தலின்படி 2 நாட்களுக்கு கவுன்சிலிங் மட்டுமே வழங்கப்படும். வகுப்புகள் நடத்தப்படாது. விருப்பம் இருந்தால் பள்ளிக்கு வரலாம் என்றும், வருகைப் பதிவேடு கிடையாது என்றும் கூறியிருந்த நிலையில், பெரும்பாலான மாணவ- மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர்.

பல நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் அனைவரையும் காண்பதாலும், பள்ளிக்கு வருவதாலும் மாணவர்கள் உற்சாகமாகக் காணப்பட்டனர். வகுப்புகள் மற்றும் பள்ளி வளாகத்தில் உரிய இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், காய்ச்சல் வந்தால் உடனடியாக ஆசிரியர்கள் மூலம் சுகாதாரத் துறையை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

இதனிடையே, தொடக்கக் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் (அரசு உதவி பெறும் பள்ளிகள்) ஆர்.பாஸ்கரசேதுபதி அறிவுரையின்படி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் மற்றும் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x