Published : 19 Jan 2021 02:40 PM
Last Updated : 19 Jan 2021 02:40 PM

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்குப் பாடத்திட்டம் குறைக்கப்படாது: ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்றும், முழுப் பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டது. 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 10ஆம் தேதி முடிவடைகின்றன. செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி தொடங்குகின்றன. எனினும் விரிவான தேர்வுக் கால அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. எனினும் மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்துக் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று (ஜனவரி 18-ம் தேதி) மாலை வெபினாரில் கலந்துரையாடினார். இந்த நேரலை நிகழ்ச்சி அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.

அதில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ''சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மற்றும் பிற மாநிலங்களின் பொதுத் தேர்வுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்படும். மாணவர்கள் அதை மட்டுமே படித்துத் தேர்வுக்குத் தயாரானால் போதுமானது.

எனினும் மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளான நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது. முழுமையான பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும். மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகளோடு ஆன்லைன் வகுப்புகள் வழியாகவும் கற்றல் தொடர்ந்து நடைபெறும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x