Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

தமிழில் வல்லமை இருந்தால் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெல்லலாம்: எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி கருத்து

கும்மிடிப்பூண்டி

தமிழில் வல்லமை இருந்தால் போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும் என, எழுத்தாளரும், போட்டித் தேர்வு பயிற்சியாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலை, என்.எம்.எஸ். நகரில், சொந்தம் கல்விச் சோலை என்ற தன்னார்வ அமைப்பு கடந்த 2012-ம் ஆண்டு முதல் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், போட்டித் தேர்வுகள் பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச விளக்க முகாம் நேற்று சொந்தம் கல்விச் சோலை வளாகத்தில் நடந்தது. இந்த முகாமில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த பாடத்திட்டம், தயாரிப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து ஓய்வுபெற்ற வருமானவரி அலுவலரும், எழுத்தாளரும், போட்டித் தேர்வு பயிற்சியாளருமான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, போட்டித் தேர்வு பயிற்சியாளர்களான அ.அப்துல் கரீம், தங்கமுத்து ஆகியோர் விரிவான விளக்க உரையாற்றினார்கள்.

முகாமில், பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

தமிழில் வல்லமை இருந்தால் போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும். டிஎன்பிஎஸ்சி புதிய பாடத் திட்டத்தின்படி, திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 5 ஆயிரம் வார்த்தைகள் தெரிந்திருந்தால் கவிஞன் ஆகலாம். 3 ஆயிரம் வார்த்தைகள் தெரிந்திருந்தால் பேச்சாளர் ஆகலாம்.

அதேபோல், தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றிருந்தால் போட்டித் தேர்வுகளில் 30 சதவீத மதிப்பெண் பெறலாம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற மொழியறிவு, கணித அறிவு, திட்டமிடல் ஆகியவை அவசியம். தமிழக மக்களிடையே பழங்காலத்திலிருந்தே கணித அறிவு அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு நாம் பெருமை கொள்ளவேண்டும். நாம் பெறும் சிறிய வெற்றியும் அடுத்தக்கட்ட பெரிய வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

போட்டித் தேர்வு ஆர்வலர்கள் பொது அறிவை வளர்த்துக்கொள்ள `இந்து தமிழ் திசை இயர் புக்' உள்ளிட்டவற்றை படிக்கலாம்.

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் பாடநூல்களிலிருந்தே கேள்விகள் கேட்கப்படுவதால் அவற்றை நன்கு படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போட்டித் தேர்வு பயிற்சியாளரான அப்துல் கரீம் பேசும்போது, ``தெளிவான இலக்கு, விடாமுயற்சி, உழைப்பு, நம்பிக்கை இருந்தால் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும். பாடத்திட்டங்களை மனப்பாடம் செய்யாமல் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி புரிந்து படிக்க வேண்டும்'' என்றார்.

இந்நிகழ்வில், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சொந்தம் கல்விச்சோலையின் நிறுவனர் சேகர், இயக்குநர் முகுந்தன், ஒருங்கிணைப்பாளர் ரகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x