Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

பட்டதாரிகளுக்கு குவிந்துள்ள மத்திய அரசு பணி வாய்ப்புகள் 6 ஆயிரத்து 506 காலியிடங்களுக்கு எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு: ஜன.31-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணிகளில் 6 ஆயிரத்து 506 காலியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. பட்டப் படிப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்ட இந்த பணிகளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மற்றும் நிறுவனங்களில் குரூப்-பி, குரூப்-சி தரத்திலான பதவிகள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன.

குரூப்-பி பிரிவில் உதவி தணிக்கை அலுவலர், உதவி கணக்கு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், கடத்தல் தடுப்பு ஆய்வாளர்,வருமானவரி ஆய்வாளர், சிபிஐ இன்ஸ்பெக்டர், உதவி அமலாக்க அதிகாரி, அஞ்சல்ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளும், குரூப்-சிபிரிவில் உதவி தணிக்கை அலுவலர், உதவிகணக்கு அலுவலர், வரி உதவியாளர், மேல்நிலை எழுத்தர், உதவி கணக்காளர், இளநிலை தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளும் உள்ளன.

இப் பணிகள் அனைத்தும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகின்றன. நேர்முகத்தேர்வு கிடையாது. எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பணி வாய்ப்பு உறுதி என்பது எஸ்எஸ்சி தேர்வின் சிறப்பு அம்சம். எழுத்துத் தேர்வில் மொத்தம்3 நிலைகள் இருக்கின்றன. பொது அறிவு,அடிப்படைக் கணித அறிவு, நுண்ணறிவுத் திறன், பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில்இருந்து ‘அப்ஜெக்டிவ்’ முறையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்த ஆண்டு குரூப்-பி பணிகளில் 3 ஆயிரத்து 763 காலியிடங்கள், குரூப்-சி பணிகளில்2 ஆயிரத்து 743 காலியிடங்கள் என மொத்தம்6 ஆயிரத்து 506 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. வயது வரம்பாக குரூப்-பி பணிகளுக்கு 30 ஆகவும், குரூப்-சி பணிகளுக்கு 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதிஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான ஆன்லைன் பதிவு (https://ssc.nic.in) கடந்த டிச.29-ம் தேதி தொடங்கியது. பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜன.31. முதல்கட்ட தேர்வு மே 29 முதல் ஜுன் 7 வரை கணினிவழியில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். தேர்வு தொடர்பான விவரம் எஸ்எஸ்சி இணையதளத்தில் (www.ssc.nic.in) விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுடன் ஒப்பிடும்போதுதமிழகத்தில் இருந்து எஸ்எஸ்சி தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும்குறைவாக இருந்து வருகிறது. போட்டித்தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பதுகூட இல்லை என்பதுதான் உண்மை. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களும் முழு தயாரிப்புடன் தேர்வு எழுதுவதில்லை.

கடந்த சில ஆண்டுகளில் எஸ்எஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற்றோர் எண்ணிக்கையை ஆராய்ந்தால் தமிழக மாணவர்களின் தேர்ச்சி வெறும் 1 சதவீதம்தான் என்கிறார்கள் தனியார் பயிற்சி மையங்களின் நிர்வாகிகள். எஸ்எஸ்சி தேர்வில் வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருப்பது இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுதொடர்பாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வரும் ரேடியன் ராஜபூபதி கூறியதாவது:

எஸ்எஸ்சி தேர்வுக்கு தமிழகத்தில்இருந்து கணிசமானோர் விண்ணப்பிக்கிறார்கள். ஆனால், தேர்ச்சி விகிதம் என்று பார்த்தால் வெறும் 1 சதவீதம் மட்டுமே. இதற்கு முக்கியக் காரணம் தமிழக மாணவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வைப் போன்று எஸ்எஸ்சிதேர்வுக்கு முழுமூச்சாகத் தயாராவதில்லை. பெயரளவிலேயே எழுதுகிறார்கள்.

மற்றொரு காரணம், எஸ்எஸ்சி தேர்வில் வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும். மேலும், எஸ்எஸ்சி தேர்வுகள், அதற்கான தயாரிப்பு குறித்து தமிழக மாணவர்களுக்கு போதிய அளவு விழிப்புணர்வு இல்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் எஸ்எஸ்சி தேர்வில் வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x