Published : 09 Jan 2021 05:17 PM
Last Updated : 09 Jan 2021 05:17 PM

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் திருக்குறள் ஓவியப் போட்டிகள்: ஒவ்வொரு படைப்புக்கும் தலா ரூ.40 ஆயிரம் பரிசு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு படைப்புக்கும் தலா ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

’’உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2013-ல் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் வாயிலாக 2020- 21ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்காகத் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பான ஓவியங்களைத் தமிழ்நாடு முழுவதிலுமுள்ள படைப்பாளிகளிடமிருந்து பெற்று நடுவர் குழு மூலம் தெரிவு செய்யப்படும். அதில் சிறந்த 15 படைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும். படைப்பொன்றுக்கு ரூ. 40,000/- பரிசுத் தொகை வழங்கப்படும்.

போட்டிக்கான விதிமுறைகள்

* ஓவியங்கள் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடர்பில் இருத்தல் வேண்டும்.

* ஓவியங்கள் ஏதேனும் ஒரு திருக்குறள் அல்லது ஒரு அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படுதல் வேண்டும்.

* படைப்பு எந்தக் குறள்/ அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்ற விவரம், தனித்தாளில் படைப்பாளரின் பெயர், முகவரி, தொடர்புகளோடு அனுப்பப்படல் வேண்டும்.

* ஒரு படைப்பாளர் ஒரு ஓவியத்தை மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட ஓவியங்கள் அனுப்பப்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படும்.

* ஓவியங்கள் சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும்.

* ஓவியங்கள் அச்சு ஊடகங்கள், இணையதளங்கள் மற்றும் வேறெந்தப் போட்டிகளிலும் பங்குபெற்றதாக இருத்தல் கூடாது.

* ஓவியங்கள் 3 அடி * 2 அடி அளவில் இருக்க வேண்டும்.

* தரமான ஓவிய கித்தான் துணியில் (Canvas Cloth) வரைய வேண்டும். ஓவியம் தரமான அக்ரிலிக் வண்ணக் கலவையில் தீட்டப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

* சென்ற ஆண்டு நிறுவனத்தால் நடத்தப்பெற்ற ஓவியப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றவர்கள், இப்போது நடத்தப்பெறும் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

* நடுவர்களின் முடிவே இறுதியானது.

* போட்டியில் பங்கேற்கவுள்ள ஓவியங்கள் நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 03.02.2021

* தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கான பரிசுகள் 24.02.2021 அன்று வழங்கப்படும்.

* வெற்றி பெறுபவர்கள் விழாவிற்கு வருகை தரப் பயணப்படி, நாட்படி போன்றவை வழங்கப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை 113, தொலைபேசி - 044-225429 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்’’.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x