Published : 07 Jan 2021 05:34 PM
Last Updated : 07 Jan 2021 05:34 PM

அண்ணா பல்கலை.யின் மாண்பைக் குலைக்கும் விதத்தில் செயல்படுவதா?- விசாரணை ஆணையத்துக்கு ஆசிரியர்கள் சங்கம் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் மாண்பைக் குலைக்கும் விதத்தில் விசாரணை ஆணையம் செயல்படுவதாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சூரப்பா மீது புகார் தந்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ஆணையம் கேட்கும் ஆவணங்களை வழங்குவதில் பல்கலை. தரப்பு தாமதப்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. நீண்ட வலியுறுத்தலுக்குப் பிறகே அண்ணா பல்கலைக்கழகம் உரிய ஆவணங்களை வழங்குவதாக விசாரணைக் குழு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் அருள் அறம் மற்றும் செயலர் சந்திரமோகன் ஆகியோர் இன்று ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு இன்று எழுதிய கடிதம்:

''அண்ணா பல்கலைக்கழகம் தேவையான விசாரணை ஆவணங்களை வழங்காமல் ஒத்துழைக்க மறுப்பதாக, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையம் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு எதிராகப் பொதுமக்கள் புகார் அளிக்க முன்வரலாம் என்ற விளம்பரங்களை விசாரணை ஆணையம் வெளியிட்டது. ஆணையம் அமைக்கப்பட்டதற்கும் மேற்குறிப்பிட்ட செயலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்னும்போது இத்தகைய செயல்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் மாண்பைக் குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகும் அண்ணா பல்கலை. ஊழியர்களிடம் கீழ்மைப்படுத்தும் கேள்விகளைக் கேட்டுத் துன்புறுத்தப்பட்டது எங்களுக்குத் தெரிய வருகிறது. முதன்மை அரசு பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தலைசிறந்த கல்விச் சூழலை உருவாக்கி, வெளிப்படுத்தத் தன்னாட்சி உரிமை உண்டு. பல்கலைக்கழக ஊழியர்களை, அரசும் விசாரணை ஆணையமும் கண்ணியத்துடன் நடத்துவதுடன் அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

பெருமை வாய்ந்த பல்கலைக்கழகத்துக்கு அவதூறு ஏற்படும் சூழலால், மாணவர்கள் வழக்கமாக வளாகத்தில் நிலவும் அமைதி மற்றும் துடிப்பை இழந்து நிற்பதை அரசு உணர வேண்டும்''.

இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x