Last Updated : 05 Jan, 2021 04:07 PM

 

Published : 05 Jan 2021 04:07 PM
Last Updated : 05 Jan 2021 04:07 PM

மியாவாக்கி முறையில் வீட்டிலேயே குறுங்காடு: எம்பிஏ மாணவர் அசத்தல்

மியாவாக்கி முறையில் அனீஷ் ராஜ்குமார் உருவாக்கிய குறுங்காடு.

அன்னூர்

மியாவாக்கி முறையில் வீட்டிலேயே குறுங்காட்டை உருவாக்கி, வளர்த்து வருகிறார் கோவையைச் சேர்ந்த எம்பிஏ மாணவர் அனீஷ் ராஜ்குமார்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள சின்னபுத்தூரைச் சேர்ந்தவர் அனீஷ் ராஜ்குமார் (21). பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வரும், தனது வீட்டின் அருகில் காலியாக இருக்கும் இடத்தில் மியாவாக்கி முறையில் 'சொல்வனம்' என்ற குறுங்காட்டை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

''கரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பல்கலைக்கழகம் திறக்கப்படவில்லை. அதற்கு மாற்றாக இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. வகுப்பில் பங்கேற்றது போக, மற்ற நேரத்தைக் குறுங்காடு வளர்ப்புக்குச் செலவிட்டு வருகிறேன்.

பெங்களூருவில் மியாவாக்கி முறையில் நிறைய இடங்களில், குறுங்காடுகள் வளர்த்து வருகின்றனர். அதேபோல் நாமும் செய்தால் என்ன என்று யோசித்ததுதான் இந்தக் குறுங்காடு உருவாகக் காரணம். வீட்டின் அருகில் உள்ள காலி நிலத்தில் சுமார் 400 சதுர அடி பரப்பளவில் இந்த குறுங்காடு உருவாகியுள்ளது. இதில் மரங்கள், பூ மரங்கள் மற்றும் பழ மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன்.

தேக்கு, மகாகனி, மலைவேம்பு, குமிழ், சந்தனம், பென்சில் மரங்களையும், அலங்காரக் கொண்டை, மந்தாரம் போன்ற பூ மரங்களையும், பலா, நெல்லி, கொய்யா, சிறு நெல்லி, பெரு நெல்லி உள்ளிட்ட மரங்களையும் உரிய இடைவெளியில் நட்டு, கிளைகள் படரப் போதுமான இடம் விட்டு பராமரித்து வருகிறேன். தற்போது 170 மரக்கன்றுகள் உள்ளன.

நிலத்தைப் பொக்லைன் இயந்திரம் மூலம் பண்படுத்தவும், நாற்றுகள் வழங்கியும் 'கூடு' அமைப்பினர் உதவினர். காடு வளர்ப்புக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினர். இதன்படி முதலில் நிலத்தைத் தோண்டி அப்பகுதியில் கிடைத்த தென்னை மட்டை, தாவரக் கழிவுகளை நிரப்பி, அதன் பின்னர் சாணக் கரைசல், ஜீவாமிர்தத்தைத் தெளித்தேன்.

அனீஷ் ராஜ்குமார்

இதனால் குப்பை நன்றாக மக்கி உரமானது. 2 அடி நீளம், 2 அடி அகலம், 1.5 அடி ஆழத்தில் குழிகள் தோண்டி, அதில் மரக்கன்றுகளை நட்டு, உரமிட்டேன். 2 அடி இடைவெளியில் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இதில் உதிரும் இலை, தழைகளே உரமாகப் பயன்படும். இதனால் தனியாக உரமிடத் தேவையில்லை. சொட்டுநீர்ப் பாசன முறையில் மரக்கன்றுகளுக்கு நீர் தெளித்து வருகிறேன்.

குறுங்காடுகளால் பறவைகள் கூடு, கட்டி வாழ்வதற்குரிய சூழல் உருவாகும். இதனால் பல்லுயிர் பெருக்கமும் ஏற்படும். நிலத்தின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். என்னுடைய இந்த முயற்சிக்கு அம்மா ரேணுகாதேவி மிகுந்த உறுதுணையாக இருக்கிறார். காடு பராமரிப்பிலும் உதவிகரமாக இருக்கிறார். நாங்கள் அடிப்படையில் விவசாயக் குடும்பம் என்பதால், குறுங்காடு வளர்ப்பில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். விடுமுறையைப் பயனுள்ள முறையில் செலவிட்டு வருவது, மனதுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கிறது''.

இவ்வாறு மாணவர் அனீஷ் ராஜ்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x