Last Updated : 04 Jan, 2021 04:57 PM

 

Published : 04 Jan 2021 04:57 PM
Last Updated : 04 Jan 2021 04:57 PM

பிசி, எம்பிசி மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் புதுவை அரசு ஏற்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

சிவா எம்எல்ஏ

புதுச்சேரி

எஸ்சி, எஸ்டி மாணவர்களைப் போன்று பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் புதுச்சேரி அரசு ஏற்க வேண்டும் என்று திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துப் புதுச்சேரி திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ இன்று வெளியிட்ட அறிக்கை:

''நாட்டில் சாதி ரீதியில் பின்தங்கியிருப்பவர்களை மேம்படுத்துவதற்காக இட ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டது. அதைப் பின்பற்ற வேண்டிய நிலை தற்போதும் உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அனைத்து ஒடுக்கப்பட்ட சாதியினர் பட்டியலிலும் ஏழ்மையானோர் உள்ளனர். அத்தோடு அவ்வாறு உள்ள ஏழைகள் அனைவருமே அரசு நிர்ணயித்த குறைந்த ஊதியம் கூடக் கிடைக்காத வேலைகளையே செய்து வருகின்றனர். அதே நேரத்தில் பலரும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைக்கின்றனர்.

இதுபோன்ற நிலையில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான முழுக் கட்டணத்தையும் அரசே ஏற்கும். இந்தத் திட்டம் நடப்பு ஆண்டே செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பைப் புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது. இது வரவேற்கக்கூடிய செயல் என்பதில் சிறிதும் மாற்றுக் கருத்து இல்லை. கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் பெறத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான கட்டணத்தைத் தனியார் பள்ளி, கல்லூரிகளில் அரசு செலுத்திவிட வேண்டும்.

மேலும், இத்திட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்களையும் சேர்க்க வேண்டும். குறைந்தபட்சம் இந்த சாதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஏழைப் பெற்றோர்களின் மாணவர்களையாவது சேர்க்க வேண்டும். இல்லையெனில் சாதி வேறுபாடு பார்ப்பதாகவும், மக்களிடையே பிளவு ஏற்படுத்துவதாகவும், அரசின் இத்திட்டத்தில் பலன்பெறாத பிற ஒடுக்கப்பட்ட சாதியினர் இந்த அரசைக் குற்றம் சாட்டும் அவல நிலை ஏற்படும்.

எனவே தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் முழுக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் திட்டத்தையும் இந்த ஆண்டே அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்''.

இவ்வாறு சிவா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x