Published : 04 Jan 2021 02:30 PM
Last Updated : 04 Jan 2021 02:30 PM

50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களைத் தேர்தல் பணியில் சேர்க்கக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களைத் தேர்தல் பணியில் சேர்க்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் உட்பட சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கான ஆசிரியர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''* தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆசிரியர்களின் பட்டியலை இறுதி செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

* கரோனா தொற்றுப் பரவல் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களைத் தேர்தல் பணியில் சேர்க்கக் கூடாது.

* ஆசிரியர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.

* மருத்துவ விடுப்பு போன்ற அவசியக் காரணங்கள் இன்றி தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக் கூடாது. எனினும் விலக்குப் பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

* தலைமையாசிரியர்கள் அவற்றைப் பரிசோதித்து, பட்டியலை இறுதி செய்து மாவட்டக் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.

* வாக்குச்சாவடிகளில் பணிபுரியத் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு ஓட்டுப் பதிவுக்கு 72 மணி நேரங்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்படும். அதில் யாருக்காவது தொற்று இருப்பது தெரியவந்தால் அவர்களுக்குப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்''.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x