Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

இளநிலை யோகா, இயற்கை மருத்துவம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 7-ல் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரிகளில் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.

தமிழக அரசின் இந்திய மருத்துவ முறை மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் ஒரு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், மற்ற பகுதிகளில் 17 தனியார் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியார் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 1,550 இடங்களும் உள்ளன. இக்கல்லூரிகளில் உள்ள இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இந்த ஆண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணப்பித்தனர். 2,002 பேருக்கான தரவரிசைப் பட்டியல் நவம்பர் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. நிவர் புயலால்கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கலந்தாய்வு வரும் 7-ம் தேதி தொடங்கி 12-ம்தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் தினமும் காலை 8-11 மணி, பகல் 12-3 மணி, மாலை 4-7 மணி என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தமிழக அரசின் இந்திய மருத்துவ முறை, ஓமியோபதி துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x