Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் கல்வியாண்டில், அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு ஷூ, சாக்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, 52.47 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தலா ரூ.15 ஆயிரத்து 250 மதிப்பிலான மடிக்கணினிகள் வழங்கப்பட்டுஉள்ளது. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சம் மாணவ, மாணவியருக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே, தனியார் கல்வி நிறுவனங்களில் அதிக மாணவர்கள் சேருகின்றனர்.

அதிக செலவு செய்து மாணவர்கள் அத்தகைய பயிற்சிகளைப் பெறுகின்றனர். இதனை மாற்றும் வகையில், நீட் உள்ளிட்ட பயிற்சிகள் அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படுகிறது. இதனால், பெற்றோர்கள் விரும்பி தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கின்றனர்.

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தவே மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்துள்ளது. இவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இதற்கென ரூ. 16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்குகிறோம். மீதமுள்ள புத்தகங்களை கரூரில் உள்ள டி.என்.பி.எல் நிறுவனத்திடம் ஒப்படைக்கிறோம். அவற்றில் இருந்து பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளிகள் எவ்வளவு புத்தகம் வேண்டுமானாலும் வாங்க அனுமதிக்கப்படுகிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து கல்வித்துறை ஆய்வு செய்து முடிவெடுத்துள்ளது. முதல்வர் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறனார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x