Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

‘இந்து தமிழ் திசை’, ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நடத்திய ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சி; விடாமுயற்சியும், திட்டமிட்ட பயிற்சியும் வெற்றியை தேடித்தரும்: சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராவோருக்கு இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் அறிவுரை

சென்னை

விடாமுயற்சியும், திட்டமிட்ட பயிற்சியும் வெற்றியை தேடித்தரும் என்று ‘இந்து தமிழ் திசை’, ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நடத்திய ‘ஆளப் பிறந்தோம்’ ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சியில் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய, மாநில அரசு உயர் பணிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து ‘ஆளப் பிறந்தோம்’ என்ற யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆன்லைன் வழிகாட்டு நிகழ்ச்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள், பயிற்சியாளர்கள் உரையாற்றினர். அவர்கள் கூறியதாவது:

மேகாலயா மாநில சுகாதாரத் துறை இணைச்செயலர் எஸ்.ராம்குமார், ஐஏஎஸ்:

சிவில் சர்வீசஸ் தேர்வானது ஐஏஎஸ்மட்டுமின்றி ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் என 24 விதமான உயர் பணிகளுக்காக நடத்தப்படும் ஒரு தேர்வு. இது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்காணல் ஆகிய 3 நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வில் திறனறித் தேர்வு (சி-சாட்), பொது அறிவு என 2 தாள்கள் இருக்கும்.

பொது அறிவில் நடப்பு நிகழ்வுகள் மட்டுமின்றி அறிவியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களில் இருந்தும் கேள்விகள் இடம்பெறும்.

சாதாரணமாக, ஒரு காலியிடத்துக்கு 10 அல்லது 10 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் மெயின் தேர்வுக்குசுமார் 12 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு காலியிடத்துக்கு 3 பேர்என்ற அடிப்படையில் நேர்காணலுக்குவிண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நிறைவாக, மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண், விருப்பம், இடஒதுக்கீடு அடிப்படையில் பணி ஒதுக்கீடும், மாநில ஒதுக்கீடும் செய்யப்படுகிறது.

கல்லூரியில் படிக்கும்போதே...

இத்தேர்வானது ஏறத்தாழ 10 மாதகாலத் தேர்வு நடைமுறையை கொண்டது. கல்லூரியில் படிக்கும்போது தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவர்கள் முதலில் தங்கள் பட்டப் படிப்பை ஆழமாகப் படிக்க வேண்டியது அவசியம். அதுதான் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான அடிப்படை தேவை. வாசிப்பு பழக்கம் மிகவும் அவசியமான ஒன்று.

பொதுவாக அனைவரும் நினைப்பதுபோல் சிவில் சர்வீசஸ் தேர்வு மிகவும் கடினமான தேர்வு அல்ல. நன்கு திட்டமிட்டுப் படித்தால் எளிதில் வெற்றி பெறலாம். ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தால் போதும்.

பொறுமை மிக அவசியம்

தேர்வுக்கான பாடங்களைத் திரும்பத் திரும்ப படிக்கவேண்டும். அவற்றைதிரும்பத் திரும்ப எழுதிப் பார்க்க வேண்டும். பொறுமை மிக மிக அவசியம். நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் படிக்கும்போது முக்கியமானவற்றை குறிப்பெடுத்துக் கொள்வது அவசியம். முதல்நிலைத் தேர்வில் ‘சி-சாட்’ என்ற திறனறித் தேர்வில் கேள்விகளுக்குப் பொறுமையாக படித்துப் பார்த்து விடையளித்தால் குறைந்தபட்ச மதிப்பெண்ணை எளிதில் பெற்றுவிடலாம்.

ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியும், கூடுதல் ஆட்சியருமான எம்.பிரதீப் குமார், ஐஏஎஸ்:

சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படிப்போருக்கு முதலில் தேவை தன்னம்பிக்கை. எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமோ படிப்பில் சிறந்த மாணவராக இருக்க வேண்டும் என்ற அவசியமோ இல்லை.

திட்டமிட்டு படியுங்கள்

தேர்வுக்கு எப்படித் தயாராகிறீர்கள் என்பதும், திட்டமிட்ட பயிற்சியும் தான் முக்கியம். பாடங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். தினசரி காலஅட்டவணை போட்டு படிப்பது நல்லது. சிலருக்கு அதிகாலை படிப்பது பிடிக்கும். இன்னும் சிலருக்கு நள்ளிரவு படிப்பது விருப்பமாக இருக்கும். எனவே, உங்களுக்கு ஏற்ற முறையை பின்பற்றி படியுங்கள்.

அதேபோல், விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்யும்போது, உங்களுக்கு இருக்கும் ஆர்வத்துக்கு ஏற்ற ஒரு விருப்பப் பாடத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். அதிக மதிப்பெண் தரும் பாடம், நண்பர்கள் தேர்வுசெய்து அதிக மதிப்பெண் பெற்ற பாடம் என்று பாடத்தைத் தேர்வுசெய்ய வேண்டாம். மேலும், பாடத்திட்டம் தொடர்புடைய புத்தகங்களைப் படித்தால் போதும். மெயின் தேர்வுக்குக் குறிப்பெடுத்து படிப்பது நல்ல பலன் தரும்.

உண்மை, வெளிப்படைத்தன்மை

நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும்போது உண்மையாகவும், வெளிப்படையாகவும் பேச வேண்டும். நமக்கு தெரியாததைத் தெரியாது என்று சொல்வதே சரியான முறை. மன உறுதியோடு, தெரிந்ததை தெளிவாகச் சொன்னாலே வெற்றிபெறலாம்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி:

கடந்த 2004-ல் தொடங்கப்பட்ட எங்கள் அகாடமி கடந்த 16 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை உருவாக்கியிருக்கிறது. சேலம், மதுரை, திருச்சி, கோவை, நாமக்கல், திருவாரூர் மற்றும் டெல்லி, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.

சிறப்பு அம்சங்கள்

இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வுப் பட்டியலில் முதல் 200 இடங்களில் எங்கள் மாணவர்கள் 20 பேர்இடம்பிடித்தனர். அவர்களில் 8 பேர்பெண்கள் என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். முதல்நிலைத் தேர்வுமற்றும் மெயின் தேர்வுக்கு இணைந்து10 மாத காலப் பயிற்சி அளிக்கிறோம். அதில் 220 வகுப்புகள் இடம்பெறும்.பேராசிரியர்களுடன் கலந்துரையாடுவது, அடுத்தடுத்து மாதிரித் தேர்வுகள், விடைத்தாள் தொடர்பாக விவாதம்,அண்மையில் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் நேரடி ஆலோசனை என எங்கள் மையத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உண்டு.

முதல்நிலைத் தேர்வு மற்றும் மெயின் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றாலே அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம். மெயின் தேர்வில் இரு மொழித்தாள், ஒரு கட்டுரை தாள், 4 பொது அறிவுத்தாள், 2 விருப்ப பாடத்தாள் என மொத்தம் 9 தாள்கள். மொழித்தாள் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலே போதும். அதேநேரத்தில் அந்தத் தாள்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் விதம், படிக்க வேண்டிய நூல்கள் குறித்து மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் கருத்தாளர்கள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு மற்றும் வங்கித்தேர்வுகள் தொடர்பான வினாக்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி ஆசிரியர்கள் சந்துரு, யு.கே.சிவபாலன், ரஞ்சித் ஆகியோர் பதில் அளித்தனர்.

இந்த ஆன்லைன் நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவிஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்வை தவற விட்டவர்கள் https://bit.ly/2WPhgM4 என்ற யூ-டியூப் லிங்க்கில் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x