

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பூஜ்ஜியம் கல்வி ஆண்டு அமல்படுத்தப்படுமா என்று முதல்வருடன் கலந்து பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நம்பியூா், பொலவபாளையம் ஊராட்சியில் வடிகால் வசதி, கான்க்ரீட் தளம் ஆகியவற்றை அமைக்கும் பணிகளைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ள 120 பயனாளிகளுக்கு தலா 4 விலையில்லா வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளையும் வழங்கினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ''இந்த ஆண்டு பள்ளிகள் செயல்படாத நிலையில், பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்கப்படுவது குறித்து முதல்வருடன் கலந்து பேசிய பிறகே அறிவிக்கப்படும். சூழ்நிலைக்கேற்ப முதல்வர் என்ன முடிவெடுக்கிறாரோ அந்த முடிவுகளைத்தான் பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 52.47 லட்சம் மடிக் கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மருத்துவ இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதல்வர் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு வழங்க உள்ள நிலையில், ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பழுது ஏற்படுவதாகப் பல இடங்களில் புகார் வந்துள்ளது. இதுகுறித்து முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.