Last Updated : 23 Dec, 2020 05:06 PM

 

Published : 23 Dec 2020 05:06 PM
Last Updated : 23 Dec 2020 05:06 PM

கர்நாடகாவில் திட்டமிட்டபடி 10, 12-ம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பு: கல்வி அமைச்சர் உறுதி

கர்நாடகாவில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநிலக் கல்வி அமைச்சர் சுரேஷ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020-21 ஆம் கல்வி ஆண்டிற்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

கர்நாடகாவில் கரோனா பரவல் சற்று குறைந்ததால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த நவம்பர் 18-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இதனிடையே, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு நெருங்கி வருவதால் பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஜனவரி 1-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வைரஸ் பாதிப்பு கணிசமாகக் குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே கரோனா வைரஸ் உருமாறிய இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு குறித்துக் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், கர்நாடகாவில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநிலக் கல்வி அமைச்சர் சுரேஷ் அறிவித்துள்ளார்.

பள்ளிகளைத் திறப்பது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஜனவரி 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இரண்டு நாட்களாகப் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஏராளமான ஊகங்கள் உலவின. எனினும் திட்டமிட்ட தேதியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும். ஆனாலும் இந்த வகுப்புகள் கட்டாயமில்லை. விருப்பப்படும் மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம்.

மத்திய சுகாதாரத் துறை புதிய வைரஸ் குறித்துப் பயப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. வருங்காலங்களில் நாம் சந்திக்க வேண்டிய சவால்களை எதிர்கொள்ளப் போதிய வலிமை மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் நமது மாநிலத்திடம் உள்ளன'' என்று கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

உருமாறிய கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் இன்று இரவு முதல் 2021 ஜனவரி 2-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தக் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x