Published : 23 Dec 2020 04:45 PM
Last Updated : 23 Dec 2020 04:45 PM

ஆன்லைன் மூலம் வங்கி, நிதிச் சான்றிதழ் படிப்பு: ஐஐடி சென்னையுடன் இன்ஃபாக்ட் புரோ ஒப்பந்தம் 

 சென்னை

வங்கி, நிதி மற்றும் காப்பீடு சார்ந்த சான்றிதழ் வகுப்புகளை நடத்த ஐஐடி சென்னையுடன் இன்ஃபாக்ட் புரோ பயிற்சி நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி சான்றிதழ் படிப்புக்கான அங்கீகாரச் சான்றிதழை ஐஐடி சென்னை வழங்கும். இதற்கான அனைத்துப் பாடங்களும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும்.

இந்தச் சான்றிதழ் படிப்பு நிதி, டிஜிட்டல் வங்கிச் சேவை, பரஸ்பர நிதிகள், காப்பீடு பங்கு பத்திரப் பரிவர்த்தனை, கடன் பத்திர முதலீடு சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்தச் சான்றிதழ் படிப்புகளை டிஜிட்டல் ஸ்கில் அகாடமி அளிக்கும். சான்றிதழ் படிப்பு விவரங்களை ஐஐடி சென்னையின் இணையதள முகவரியில் (http://skillsacademy.iitm.ac.in) தெரிந்துகொள்ளலாம்.

ஐஐடி சென்னையின் வேதியியல் பிரிவு பேராசிரியர் மங்கள சுந்தர், டிஜிட்டல் ஸ்கில் பிரிவுக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். சான்றிதழ் படிப்பு குறித்து அவர் கூறும்போது, ''பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும், ஏற்கெனவே பணியில் இருப்பவர்களுக்கும் அவர்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு இதுபோன்ற சான்றிதழ் படிப்புகள் நிச்சயம் உதவும்'' என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் ஸ்கில் அகாடமியில் காக்னிஸன்ட் டெக்னாலஜி நிறுவனர் லட்சுமி நாராயணன் மற்றும் ஐஐடி முன்னாள் இயக்குநர் எம்.எஸ். ஆனந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நாஸ்காமில் உள்ளவர்கள் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாகவும் உள்ளனர். இதன் தலைமை அறங்காவலராக சென்னை ஐஐடி இயக்குநர் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x