

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்ய ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
’’தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைவரும் அவர்களது ஒரு முறைப் பதிவு மற்றும் நிரந்தரப் பதிவில், தங்கள் ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள், விரைவில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இனி வரும் காலங்களில் நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யும் முன் ஆதார் எண்ணைப் பதிவு செய்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய முடியும். தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஜன.3 ஆம் தேதி நடக்க உள்ள குரூப் -1 முதல் நிலைத் தேர்வு, ஜன.9, 10 ஆம் தேதி நடக்க உள்ள உதவி இயக்குனர் ( தொழில், வணிகத் துறை) பதவிக்கான தேர்வு ஆகியவற்றுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை ஆதார் எண்ணை உள்ளிட்டே பதிவிறக்கம் செய்ய முடியும்.
கூடுதல் விவரங்களுக்கு: 1800 425 1002,
இ-மெயில்: contacttnpsc@gmail.com ஆகியவை மூலம் தொடர்பு கொள்ளலாம்’’.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.