கால்நடை மருத்துவப் படிப்புகள்: சிறப்புப் பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு சிறப்புப் பிரிவு கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இன்று தொடங்கியுள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் நாளை தொடங்குகிறது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்பு (பிவிஎஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), கோழியினத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (பி.டெக்) ஆகியவை உள்ளன.
இந்த ஆண்டு புதிதாகச் சேலம்- தலைவாசல், தேனி - வீரபாண்டி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் 3 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்தப் படிப்புகளுக்கு 2020-21 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது அக்.9-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 13,901 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (டிச.23) தொடங்கி நடைபெற்று வருகிறது.
கலந்தாய்வு தொடர்பான மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
