பிப்ரவரி வரை பொதுத்தேர்வு கிடையாது; ஆன்லைன் தேர்வுக்கு சாத்தியமே இல்லை: மத்தியக் கல்வி அமைச்சர் உறுதி

பிப்ரவரி வரை பொதுத்தேர்வு கிடையாது; ஆன்லைன் தேர்வுக்கு சாத்தியமே இல்லை: மத்தியக் கல்வி அமைச்சர் உறுதி
Updated on
1 min read

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பொதுத்தேர்வு கிடையாது என்றும், ஆன்லைன் முறையிலான தேர்வுக்கு சாத்தியமே இல்லை என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, பாடத் திட்டத்தில் 30 சதவீதம் வரை சிபிஎஸ்இ குறைத்தது. மேலும், 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து ட்விட்டர் மூலம் கருத்துகளைத் தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்தார். அதன்படி மாணவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, பொதுத்தேர்வு குறித்து ஆசிரியர்களுடன் அமைச்சர் பொக்ரியால் இன்று மாலை 4 மணி முதல் நேரலையில் ஆலோசனை நடத்தினார். ஆசிரியர்கள் தங்களது சந்தேகங்கள், கருத்துகளை ட்விட்டரில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேரலையில் பேசிய அமைச்சர் பொக்ரியால், ''ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. பிப்ரவரி 2021-க்குப் பிறகு தேர்வுத் தேதி அறிவிக்கப்படும்.

தேர்வுகளை ரத்து செய்து மாணவர்களைத் தரம் உயர்த்துவது அவர்களின் வளர்ச்சிக்குச் சரியாக இருக்காது. கோவிட் காலத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் என்று அவர்கள் முத்திரை குத்தப்படுவார்கள். அவர்களின் உயர் படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் அது பிரச்சினையை ஏற்படுத்தும். அதனால் தேர்வுகள் ரத்து செய்யப்படாது.

அதேபோலப் பொதுத்தேர்வுகள் காகித முறையிலேயே நடத்தப்படும். ஏனெனில் லேப்டாப், நிலையான மின்சாரம் மற்றும் இணைய வசதிகள் அனைத்து மாணவர்களுக்கும் சாத்தியப்படாது.

கரோனா காலத்தில் குறிப்பிட்ட சதவீத மாணவர்களுக்குச் சமமான கல்வி கிடைப்பதில்லை. எனினும் கற்பித்தலுக்கு ஆன்லைன் உள்ளிட்ட சிறப்பு வழிமுறைகளைக் கையாள்கிறோம். இதையே தேர்வுகளுக்கும் பயன்படுத்துவது சரியானதாக இருக்காது.

30 சதவீதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். சிபிஎஸ்இ சார்பில் 4.8 லட்சம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் கற்பித்தல் குறித்துப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள்ன. ஆசிரியர்களின் நலனுக்காக ’நிஸ்தா’ உள்ளிட்ட தளங்கள் நிறுவப்பட்டுள்ளன.

என்சிஇஆர்டி சார்பில் ஆன்லைன் பாட உள்ளடக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ’திக்‌ஷா’ உள்ளிட்ட தளங்களில் பல்வேறு மாநில மற்றும் கல்வி வாரியங்களின் பாடத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன'' என்று மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in