Last Updated : 21 Dec, 2020 08:16 PM

 

Published : 21 Dec 2020 08:16 PM
Last Updated : 21 Dec 2020 08:16 PM

புலம்பெயர்த் தமிழர்களுக்காக மேடைத்தமிழ் பயிற்சிப் படிப்பு அறிமுகம்: தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

புலம் பெயர்ந்து அயல் நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக, மேடைத்தமிழில் பேசுதல் குறித்த புதிய பயிற்சிப் படிப்பு தொடங்கப்பட உள்ளதாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

'வணக்கம் மலேசியா' ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர் மையத்தின் ஒருங்கிணைப்பில் பள்ளி மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தனித்தனியே பன்னாட்டுப் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளுடைய மாபெரும் இறுதிச்சுற்றுப் போட்டியின் நேரலைத் தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசுப்ரமணியன் இன்று உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறும்போது, ''புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பிள்ளைகளுக்குத் தமிழ்க் கல்வியை அளிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. அதே வேளையில் ஒரு மொழி, உயிர்ப்புடன் தலைமுறைகளைக் கடந்து வாழ வேண்டுமென்றால், அம்மொழி, பேச்சு வழக்கில் பயன்படுத்தப்பட வேண்டும். நல்ல மேடைத்தமிழ்ப் பேச்சு பலருக்கும் அன்றாட வாழ்வில் மொழியைப் பயன்படுத்துவதற்கு உந்துதலாக அமையும்.

மேடைத்தமிழை ஆற்றலுடன் வெளிப்படுத்த பல நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மேடையில் பேசும் கலையைப் பயிற்றுவிக்கும் பயிற்சியினைத் தொடங்க முடிவெடுத்துள்ளோம். இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ள இப்படிப்புக்கான பயிற்சிகளைச் சிறந்த தமிழ்ப் பேச்சாளர்களைக் கொண்டு செய்முறை நிலையில் வழங்கவுள்ளோம். சான்றிதழ் நிலை அளவிலான இப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் பேச்சுத் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு வடிவமைக்கப்படும்.

தமிழ் வளர் மையத்துடன் தொடர்பில் உள்ள உலகத் தமிழ் அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் இப்பயிற்சி தமிழர்கள் வாழும் நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் தமிழை வீட்டிலும், பொதுவெளியிலும் பேசுவோரின் எண்ணிக்கை அயலகங்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கணிசமாக அதிகரிக்கும்'' என்று துணைவேந்தர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x