Last Updated : 19 Dec, 2020 12:48 PM

 

Published : 19 Dec 2020 12:48 PM
Last Updated : 19 Dec 2020 12:48 PM

ஜேஇஇ மெயின் தேர்வுக்குப் பொதுத்தேர்வில் 75% மதிப்பெண் தகுதியை நீக்குக: மாணவர்கள் கோரிக்கை

ஜேஇஇ மெயின் தேர்வுக்குப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 75% மதிப்பெண் பெற வேண்டும் என்ற தகுதியை நீக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்சி ஆகிய மத்திய அரசு நிதியுதவியின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர, அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எனப்படும் ஜேஇஇ தேர்வு நடத்தப்படுகிறது.

ஜேஇஇ தேர்வு முதல்நிலைத் தேர்வு (மெயின்) மற்றும் முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) என இரண்டு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்தியக் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்பப் படிப்புகளில் சேரலாம். அதைத் தொடர்ந்து நடத்தப்படும் ஜேஇஇ முதன்மைத் தேர்விலும் தகுதி பெறுபவர்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற கல்வி நிறுவனங்களில் சேரலாம்.

மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு ஜேஇஇ தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படாது. ஆனால், இத்தேர்வை எழுத பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும்.

இந்நிலையில், ஜேஇஇ முதல்நிலைத் தேர்வுக்குப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 75% மதிப்பெண் பெற வேண்டும் என்ற தகுதியை நீக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜேஇஇ மெயின் 2021 தேர்வு முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மத்தியக் கல்வி அமைச்சரைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள மாணவர்கள், ''பெருந்தொற்றுக் காலத்தில் எங்களின் கல்வி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் முழுமையாகப் பயன் அளிக்கவில்லை. பள்ளிகள், பாடத்திட்டங்களை அவசரமாக நடத்தி முடித்துவிட்டன. இதனால் எங்களால் முழுமையாகப் பொதுத் தேர்வுகளுக்குத் தயார் ஆவது சிரமமாக உள்ளது.

பொதுத் தேர்வுகளில் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற முடியுமா என்று தெரியவில்லை. இதனால் எங்களுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வு வாய்ப்பு பறிபோகிறது. மத்தியக் கல்வித்துறை இதுகுறித்துப் பரிசிலீத்து இந்த ஆண்டுக்கு மட்டுமாவது 75 சதவீத மதிப்பெண் என்ற தகுதியை நீக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல மேலும் சில மாணவர்கள், ''ஜேஇஇ, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தைக் குறைக்க வேண்டும், குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும்'' என்றும் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x