Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் அல்லாத பணியிடத்தை நிரப்பலாம்: அரசு பள்ளிகளுக்கு அனுமதி

சென்னை

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணை:

அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், பதிவறை எழுத்தர் ஆகிய ஆசிரியர் அல்லாதபணியிடங்களை அனுமதிப்பது அவசியம் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் 389 இளநிலை உதவியாளர், 95 பதிவறை எழுத்தர் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஏற்படும் ஊதிய செலவினங்களுக்கு ஏற்றவாறு பள்ளிக்கல்வி இயக்குநரின் பொது தொகுப்பில் இருந்து 254உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சரண் செய்யப்படுகிறது என்றும், புதிய பணியிடங்களால் அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படாது என்றும் கோரியிருந்தார்.

அதன்படி, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 389 இளநிலை உதவியாளர், 95 பதிவறை எழுத்தர் பணியிடங்களை (மொத்தம் 484) உருவாக்கி அரசு ஆணையிடுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்ககத்தில் 250 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் குறைக்கப்படும்என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x