Published : 17 Dec 2020 03:31 PM
Last Updated : 17 Dec 2020 03:31 PM

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட், விளையாட்டு, காமிக்ஸ் படிப்புகளுக்குத் தனி மையம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட், விளையாட்டு, காமிக்ஸ் ஆகிய படிப்புகளுக்குத் தனி மையம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

சிஐஐ எனப்படும் இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இணைய முறையில் நடைபெற்று வருகிறது. இதில், மத்தியத் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ''தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் தனித்துவமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் நாட்டில் இருக்கிறோம். இதன் மூலம் பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.

தற்போது அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட், விளையாட்டு, காமிக்ஸ் (AVGC) உள்ளிட்ட துறைகள், சிறப்பாக வளர்ந்து வருகின்றன. உலகின் தலைசிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நம்முடைய நிபுணர்கள் உதவி வருகின்றனர்.

அதேபோல இந்தியத் திரைப்படங்களிலும் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களின் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதை முன்னிட்டு ஐஐடி மும்பையுடன் இணைந்து அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட், விளையாட்டு, காமிக்ஸ் ஆகிய துறைப் படிப்புகளுக்குத் தனியாக நிபுணத்துவம் வாய்ந்த மையம் உருவாக்கப்படும். மத்திய அரசு உருவாக்கும் இந்த மையத்தில் AVGC தொடர்பான படிப்புகள் கற்பிக்கப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கோவாவில் 51-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். 2022ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா 75-வது ஆண்டைக் கொண்டாட உள்ள நிலையில், இந்தியா சார்பில் தனியாக, சிறப்பு பெவிலியன் உருவாக்கப்படும்'' என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பிரச்சார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி ஷஷி சேகர் வேம்பாதி பேசும்போது, ''பெருந்தொற்றுக் காலத்தில் பல்வேறு காட்சி ஊடகங்கள் பொது ஒளிபரப்பின் கீழ் கரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு உள்ளடக்கங்களை ஒளிபரப்பின.

இதே காலத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட நெடுந்தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வரவேற்பைப் பெற்றன. இதன்மூலம் குடும்பங்களுக்கு ஏற்ற உள்ளடக்கங்களும் ரசிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x