

புதுச்சேரி, காரைக்காலில் 9 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்குகின்றன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை முதல்கட்டமாகக் காலையில் மட்டும் பள்ளிகள் இயங்கும். ஜனவரி 18 முதல் வகுப்புகள் முழு நேரமாக நடக்கும் என்று கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்று காரணமாகக் கடந்த மார்ச் மாத இறுதி முதல் அனைத்துப் பள்ளிகளும் புதுச்சேரி, காரைக்காலில் மூடப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் நோய்த்தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து, அக்.8 ஆம் தேதி முதல் 9 ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கல்வியமைச்சர் கமலக்கண்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''புதுச்சேரி, காரைக்காலில் வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு அனைத்து வகுப்புகளும் நடைபெறும். பெற்றோர் ஒப்புதலுடன் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். வருகைப் பதிவேடு கட்டாயமில்லை.
அதைத் தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதி முதல் முழுநேரமும் பள்ளிகள் செயல்படும். கரோனா பரவலுக்கு முன்பு செயல்பட்டது போலவே மத்திய அரசின் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படும்,
தமிழகப் பாடத்திட்டத்தைத்தான் புதுச்சேரி, காரைக்காலில் பின்பற்றுகிறோம். தேர்வு வழிமுறைகளிலும் தமிழகத்தையே பின்பற்றுவதால் அவர்களின் நடைமுறையையே கடைப்பிடிப்போம்'' என்று குறிப்பிட்டார்.
கரோனா ஊரடங்கில் மூடப்பட்ட பள்ளிகள் 9 மாதங்களுக்குப் பிறகு முழுமையாக ஜனவரியில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.