

நாடு முழுவதும் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் நாட்டுப் பசுக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த காமதேனு இருக்கை அமைக்கத் திட்டமுள்ளதாக மத்தியக் கல்வி இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார்.
தேசிய காமதேனு ஆயோக் சார்பில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் காமதேனு இருக்கைகளை ஏற்படுத்துவது தொடர்பாக தேசிய இணையக் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் ஏஐயு ஆகிய அமைப்புகள் இதில் பங்கு வகித்தன.
அதில், நாட்டுப் பசுக்களின் வேளாண், சுகாதார, சமூக, பொருளாதார மற்றும் சூழல் முக்கியத்துவம் குறித்து இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது என்றும், இதற்காகக் கல்வி நிறுவனங்களில் காமதேனு இருக்கை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தேசிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா வேண்டுகோள் விடுத்தார்.
இந்தக் கருத்தரங்கத்தில் மத்தியக் கல்வி இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே கலந்து கொண்டார். கதிரியாவுக்குப் பதிலளித்த அவர், ''சரியான நேரம் வரட்டும். அரசு இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்கும். சில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் காமதேனு இருக்கை தொடங்கப்படும். பின்னர் பிற கல்லூரிகள் அதைப் பின்பற்றும். இது உறுதியாக நடக்கும்'' என்று தெரிவித்தார்.
2019-ல் உருவாக்கப்பட்ட தேசிய காமதேனு ஆயோக் அமைப்பு, பசுக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. மத்திய மீன்வளத்துறை, கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.