Last Updated : 15 Dec, 2020 07:59 PM

 

Published : 15 Dec 2020 07:59 PM
Last Updated : 15 Dec 2020 07:59 PM

கரோனா காலத்தில் கற்பிப்பதில் சிரமத்தை எதிர்கொள்ளும் 46% இந்தியக் கல்லூரி ஆசிரியர்கள்: ஆய்வில் தகவல்

கரோனா காலத்தில் இந்தியக் கல்லூரி ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் கற்பிப்பதில் அதீத சோர்வு, உற்சாகக் குறைவு உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொள்வதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் கல்வி முறை குறித்தும் கற்பித்தலில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் லண்டனைச் சேர்ந்த க்யூஎஸ் (Quacquarelli Symonds) நிறுவனம் ஆய்வு நடத்தியது. இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1,700 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:

''கோவிட்-19க்கு முந்தைய கற்றலும் பெருந்தொற்றுக் காலத்திலான ஆன்லைன் கற்றலும் ஒன்றல்ல என்பதைத் தற்போது உணர வேண்டியது முக்கியம். இத்துடன் உடல் மற்றும் மனநலம், வேலை பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகள் ஆசிரியர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்களில் குறைந்தபட்சம் 46 சதவீதம் பேர் டிஜிட்டல் தளங்களைக் கையாளத் தேவையான திறமையில் போதாமையை உணர்கின்றனர். இதனால் அதீத சோர்வு, உற்சாகக் குறைவு உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த ஆய்வில் அறிமுகமில்லாத ஊடகம் வழியாக புதிய உபகரணங்களைக் கொண்டு கற்பித்தல், கற்போரைத் தொடர்ந்து ஊக்குவித்துத் தக்க வைப்பதில் சிரமம், பாடங்கள் கற்பிக்கும்போது மாணவர்களை உரையாட வைப்பது உள்ளிட்டவை பிரதான பிரச்சினைகளாக இருந்தன.

பாதுகாப்பற்ற சைபர் வெளியில் தங்களையும் மாணவர்களையும் காத்துக் கொள்வதும் ஆசிரியர்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. ஆய்வில் கலந்துகொண்ட சுமார் 9 சதவீத ஆசிரியர்கள் தங்களின் மன அழுத்தம் மற்றும் கவலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆன்லைன் கற்பித்தலால் தங்களின் மன அழுத்தம் மற்றும் கவலை ஓரளவு அதிகரித்துள்ளதாக 52 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொழில்நுட்ப அறிவு, டிஜிட்டல் திறன்கள், மெய்நிகர் கற்பித்தல் போன்றவற்றில் 30 சதவீத ஆசிரியர்கள் பின்தங்கியுள்ளனர். அதேநேரம் ஆன்லைன் வகுப்பில் கணினி முன்னால் அமர்ந்து தொலைதூரக் கற்பித்தலை வெற்றிகரமாகச் சமாளித்துவிடுவதாக 70 சதவீதம் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்''.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x