Published : 15 Dec 2020 01:44 PM
Last Updated : 15 Dec 2020 01:44 PM

ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள இலவசப் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை ஒப்பந்தம்- டிச.21 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இலவசப் பயிற்சிக்கு டிச.21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப் பிரிவு மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஐஐடி (ஜேஇஇ), போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு இந்தியத் தொழில்நுட்பக் கழக நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக இன்று டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும் M/s.Nextgen Vidhya Pvt. Ltd. நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியரைத் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த உயர்கல்விக்கான போட்டித் தேர்விற்குத் தயார்படுத்தும் வகையில் இணையதளம் வாயிலாகப் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது.

இப்பயிற்சி கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் வழங்கப்படும். மேலும், இப்பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைக் கேட்டு அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியருக்குத் தனித்தனியே லாகின் ஐடி மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.

மேலும் பள்ளி ஆசிரியர், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் ஆகியோருக்கும் மாணவர்கள் பயிற்சி பெறுவதைக் கண்காணிக்கும் வகையில் லாகின் ஐடி மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.

மேலும் இப்பயிற்சிக்கான பதிவு டிசம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 2021 ஜனவரி 4ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் M/s.Nextgen Vidhya Pvt. Ltd. நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கௌரவ், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x