Published : 14 Dec 2020 06:45 PM
Last Updated : 14 Dec 2020 06:45 PM

கேட் 2021 விண்ணப்பம்: தேர்வு மையங்களை மாற்ற நாளை கடைசித் தேதி

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை வரை தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்.

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ.,எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சேருவதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

கேட் நுழைவுத்தேர்வை பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் அல்லது சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று ஆண்டுதோறும் நடத்தும்.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2021-22 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை (டிசம்பர் 15) வரை தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

எனினும் ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்கள் மட்டுமே தேர்வு மையங்களை மாற்ற முடியும். தேர்வர்கள் Gate.iitb.ac.in என்ற முகவரியில் சேர்க்கை எண் மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x