Last Updated : 14 Dec, 2020 03:14 AM

 

Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தொடக்கம்; அறிவியல் பாடம் தேர்வெழுத தனித்தேர்வர்களை அனுமதிக்க வேண்டும்- ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அறிவியல், தொழிற்பிரிவு பாடப்பிரிவுகளையும் நேரடி தனித்தேர்வர்கள் எழுத பள்ளிக்கல்வித் துறை அனுமதிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை ஆண்டுக்கு சராசரியாக 17 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதுதவிர பள்ளிகளில் படிக்காமல் தனியார் மையங்களின் உதவியுடன் பயிற்சி பெறும்ஆயிரக்கணக்கான தனித்தேர்வர்களும் தேர்வை நேரடியாக எழுதி வருகின்றனர்.

இதில் தனித்தேர்வர்கள் மேல்நிலை வகுப்புகளில் கலைப்பிரிவு பாடங்களை மட்டுமே தேர்வு செய்ய தேர்வுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஆர்வம் இருந்தாலும் அறிவியல், தொழில் பாடப்பிரிவுகளை தனித்தேர்வர்கள் படிக்க முடியாத நிலை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் சி.அருளானந்தம் கூறியதாவது:

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதற்கு மேல் பள்ளிக்கு செல்ல இயலாதவர்கள் 16 வயது நிறைவு பெற்றபின் தனித்தேர்வர்களாக பிளஸ் 1 பொதுத்தேர்வையும், அதில் தேர்ச்சி பெற்றதும் பிளஸ் 2 பொதுத்தேர்வையும் நேரடியாக எழுதிக்கொள்ளலாம். அதன்படி 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஆண்டுக்கு சராசரியாக 12 ஆயிரம்தனித்தேர்வர்கள் எழுதுகின்றனர்.

எனினும், செய்முறை தேர்வில்லாத வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல், வரலாறு, வணிக கணிதம் உள்ளிட்ட கலைப்பிரிவு பாடங்களை மட்டுமே அவர்கள் படிக்க முடியும். அறிவியல், தொழிற்பிரிவு பாடங்களை தேர்வுசெய்ய முடியாது.

நேரடி தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு இந்த நடைமுறையை தேர்வுத் துறை பின்பற்றுகிறது. குடும்பச் சூழல், பொருளாதார பின்னடைவு, உடல்நலக் குறைவு உட்பட தவிர்க்க முடியாத காரணங்களால்தான் கணிசமான மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர்.

மாணவர்களின் கனவை சிதைக்கும்

அவ்வாறு இடைநின்றவர்கள் மீண்டும் ஆர்வத்துடன் படிக்க வரும்போது அவர்களின் கனவை சிதைக்கும் விதத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பது ஏற்புடையதல்ல. மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளியில்கூட செய்முறை பாடங்கள் உட்பட அனைத்து விதமான பாடப்பிரிவுகளையும் தனித்தேர்வர்கள் தேர்வு செய்து படிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

தமிழகத்திலும் 10-ம் வகுப்புபொதுத்தேர்வில் அறிவியல் பாடசெய்முறை தேர்வை தனித்தேர்வர்கள் எழுதுகின்றனர். அதேபோல், மேல்நிலை வகுப்பிலும் அனைத்து பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளை தனித்தேர்வர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசின் கடமை

தனியார் பயிற்சி மைய ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, “நீண்ட காலமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். மாணவர்கள் விரும்பியதை படிப்பதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டியது அரசின் கடமை. தற்போதுவினாத்தாள், விடைத்தாள் தயாரிப்பு உட்பட பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை தொடங்கியுள்ளது.

எனவே, இந்த ஆண்டு முதல் தனித்தேர்வர்கள் அறிவியல், தொழிற்பிரிவு பாடங்களை தேர்வுசெய்து படிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்சம் தொழிற்பிரிவு பாடங்களை மட்டுமாவது தேர்ந்தெடுக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x