Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு: சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு உத்தரவு

இளநிலை பட்டப்படிப்புகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு நாளை (டிச.7) முதல் வகுப்புகள்தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சிமுறையில் வகுப்புகளை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு தலைமைசெயலர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அரசாணை:

பொறியியல் உட்பட அனைத்துவித கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு நாளை(டிச.7) முதல் நேரடி வகுப்புகள்நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளை திறக்கக் கூடாது. அப் பகுதியில் வசிக்கும் மாணவர்களை கல்லூரிக்கு வர அனுமதிக்கக் கூடாது.

50 சதவீத மாணவர்கள்

வளாகங்களில் முகக் கவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி பயன்பாடு ஆகியவற்றை முறையாக மாணவர்கள், ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.

அதேபோல், 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகளை நடத்தவேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்களை கல்லூரி உள்ளே அனுமதிக்கக் கூடாது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் இணையதள வகுப்புகளையும் தொடர வேண்டும்.

பாட நேரத்தை அதிகரிக்கலாம்

இதுதவிர தேவைக்கேற்ப பாடவேளைகளின் நேரத்தை அதிகரித்து கொள்ளலாம். விடுதிகளில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்கியிருக்க வேண்டும். கல்லூரிக்கு அருகே உள்ள உறவினர் வீடுகளில் மாணவர்கள் தங்கிக் கொள்ளவும் அனுமதி தரலாம். இந்தக் கட்டுப்பாடுகளை கல்வி நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

பல்கலை. தேர்வு தள்ளிவைப்பு

இதற்கிடையே கல்லூரிகள் திறப்பை முன்னிட்டு அண்ணா பல்கலை. நடப்பு பருவத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் டிச.14-ல்தொடங்கும். இத் தேர்வுகள் முடிந்தபின்னரே இதர மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கும்.

தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றுஅண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x