Published : 04 Dec 2020 07:01 PM
Last Updated : 04 Dec 2020 07:01 PM

தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்: சமூகம் என்ன செய்ய வேண்டும்?

போர், மழைக்காலம், பேரிடர்க் காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுவது கல்விதான்.

கல்வி என்று சொல்வதைக் காட்டிலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லலாம். விடுமுறை அறிவிப்புகள் குழந்தைகளுக்கு வேடிக்கையான மகிழ்ச்சியைத் தரலாமே தவிர அது உண்மையிலேயே குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும் சுமையையும் அதிகரிக்கச் செய்கிறது.

நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும்போது அவர்களுடைய விளையாட்டு வகுப்புகள், கைத்தொழில் வகுப்புகள், ஓவியம் மற்றும் இசை வகுப்புகள் எல்லாம் மறுக்கப்பட்டு பாடங்களையும் மதிப்பெண்களையும் மட்டுமே அவர்கள் முழுமையாக எதிர்கொள்ள நேரிடுகிறது. உலகம் ஒரு பேரிடர் சவாலை எதிர்கொள்ளும் போது அதே அளவிலான சவாலை மாணவர் உலகமும் எதிர்கொள்கிறது.

பேரிடர்களால் அதிகரிக்கும் அழுத்தம்

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஒரு பக்கச் சிக்கலைச் சமூகம் எதிர் கொள்கிறது என்றால் மாணவச் சமூகம் அனைத்துத் திசைகளிலிருந்தும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. தினசரி நடந்து கொண்டிருக்கும் பாடத்திட்டங்கள் தடைப்படுவதால் வேகவேகமாகப் பாடத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆசிரியர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தேர்வுக் கால மன அழுத்தத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். மாதிரித் தேர்வுகள், மாதாந்திரத் தேர்வுகள், தேர்வுக்கான தயாரிப்புக் காலம் போன்ற விஷயங்கள் மாணவர்களின் மனநிலையில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, பள்ளிகளின் எதிர்பார்ப்பு என்று ஒட்டுமொத்த அழுத்தமும் மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது. இந்த உணர்வுபூர்வமான, நுட்பமான சிக்கலைப் பெற்றோர்களும் கல்வியாளர்களும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.

புதியதொரு பாதிப்பு

வழக்கமான இயற்கை இடர்க்காலம் போல் இல்லாமல் இந்தக் கரோனா பேரிடர்க்காலம் கல்வியில் புதியதொரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆம்! தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெரிய அளவில் வருமான இழப்பைச் சந்தித்து இருக்கிறார்கள். அவர்களுடைய இயல்பு வாழ்க்கை இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறது. ஏதாவது விபத்து நிகழ்ந்தால் மட்டுமே விழித்துக் கொள்கிற சமூகமாக நாம் இருப்பதால், தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் அமைதியாக இருக்கிறோம்.

இது தனியார் பள்ளி ஆசிரியர்களின் பாதிப்பு மட்டுமல்ல. ஒரு தலைமுறைக்கான பாதிப்பு என்பதை நாம் உணரத் தவறி இருக்கிறோம். ஆசிரியர்கள் என்றால் அவர்களைத் தனியார் பள்ளி ஆசிரியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்று பிரித்துப் பார்க்க முடியாது. பிரித்துப் பார்க்கவும் கூடாது. எல்லோருமே கற்பித்தல் பணியில் இருப்பவர்கள்தான். லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் அவர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது.

கல்லாய்க் கிடக்கும் சமூகத்தைச் சிற்பமாகச் செதுக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்தவர்கள் ஆசிரியர்கள் என்றால், இதில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் அடங்குவார்கள்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களைக் காட்டிலும் அதிக அளவு கனவுகள் திணிக்கப்பட்டவர்களாகவும், பெரும்பாலும் பெற்றோர்களால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பயணம் செய்பவர்களாகவும் இருப்பவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள். அந்த இலக்கில் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டிய ஆசிரியர்கள்தான் இப்போது பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நாம் இன்னும் உணரவில்லை.

வறுமையில் எப்படி வழிகாட்டுவது?

மாணவர்களின் கனவுகளும் இலக்குகளும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் சிதறடிக்கப்படும்போது அது தேசத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை நாம் உடனடியாக உணர்ந்துகொள்ள வேண்டும். வழிநடத்த வேண்டிய ஆசிரியர்கள் வறுமையில் இருக்கும்போது, அவர்களால் எப்படி மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும்?

"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார் வாய்ச் சொல்" என்பது வள்ளுவர் வாக்கு. யாரொருவர் வாய்மை உடையவராக இருக்கின்றாரோ அவருடைய அறிவுரைகள் மட்டுமே சமூகத்தில் நிலைத்திருக்கும். ஒருவருடைய அறிவுரைகள் இந்தச் சமூகத்தில் நிலைப்படுத்தப்பட வேண்டுமானால் அறிவுரை கூறுபவர், அதற்கான தகுதிகளோடு இருக்க வேண்டும். இந்த வகையில் பார்த்தோமென்றால் தன்னம்பிக்கை மிக்க சமுதாயம்தான் இன்னொரு தன்னம்பிக்கை மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும்.

மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக, தடைகளைத் தாண்டி எப்படி முன்னேற வேண்டும்? சவால்களை எப்படிச் சந்திக்க வேண்டும்? என்று அறிவுரை கூறுபவர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்களின் நடவடிக்கைகளைப் பார்த்தே மாணவர் சமுதாயம், தம்முடைய வழிகளைத் தீர்மானிக்கிறது. ஆசிரியர்களுடைய வார்த்தைகளை வேதவாக்காக எண்ணிச் செயல்படுபவர்கள் மாணவர்கள்.

இப்படிப்பட்ட ஆசிரியர்கள் வருமான வாய்ப்பை இழந்து அன்றாட வாழ்க்கைக்கான தேவைக்கே கஷ்டப்படும்போது, அவர்கள் எப்படி வலிமையான மாணவர் சமுதாயத்தை உருவாக்க கூடிய மனநிலையில் இருக்க முடியும்?

கடந்த எட்டு மாத காலமாக வருவாய் இல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். சில ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகம் தரும் பாதி சம்பளத்தில் குடும்பத்தைக் கவனித்து வருகிறார்கள். சிலர் தள்ளுவண்டியில் காய்கறி விற்கப் புறப்பட்டு விட்டார்கள். மேலும் சிலர் ஜெராக்ஸ் கடைகளில், இ-சேவை மையங்களில் வேலை செய்கிறார்கள். விவசாயம், கூலி வேலை என்றுகூடச் சிலர் சென்றுவிட்டார்கள். தன்னம்பிக்கையோடு ஒரு சூழலை எதிர்கொள்ள இவர்கள் வேலை செய்யப் போவதில் எந்த தவறும் இல்லை. இதுகூட ஒரு முன்னுதாரணமான வாழ்க்கைதான்.

ஆனால் சமூகத்தின், எதிர்கால வாழ்க்கைக் கட்டமைப்பிற்கு வழிகாட்டக்கூடிய ஆசிரியர்களை இப்படி ஒரு சூழலில் தள்ளிவிட்டு, அவர்களைத் தூர நின்று வேடிக்கை பார்ப்பது எந்த வகையில் நியாயம்? மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இருப்பதால் பள்ளி நிர்வாகத்தால் முழு சம்பளத்தைத் தர முடியவில்லை. எனவே பள்ளி நிர்வாகத்தையும் குறை சொல்ல முடியாது.

பாதிக்கப்பட்டிருப்பது ஆசிரியர் சமூகம் மட்டுமா?

இப்படிப்பட்ட ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் ஒட்டுமொத்தச் சமுதாயமும் முன்வந்து ஆசிரியர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும். ஆசிரியர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் பாதுகாத்திருக்க வேண்டும். ஏனென்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஆசிரியர் சமூகம் மட்டுமில்லை. எதிர்காலச் சமூகம். இதை நாம் உணர்ந்திருக்கவில்லை என்பதுதான் வருத்தமான செய்தி.

ஆம்! மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறந்து இந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கும்போது அவர்கள் எந்த மாதிரியான மனநிலையில் இருப்பார்கள்? ஆசிரியர்களிடம் அறிவு வளர்ச்சிக்குப் பதில் அறிவு வறட்சி ஏற்பட்டு இருக்கும் என்பதை இப்போதாவது நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ( இதையெல்லாம் தாண்டி விதிவிலக்காகச் சில ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள் என்பது வேறு செய்தி)

குடும்பத்தைக் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் எப்படி முழு மனதோடு மாணவனின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தமுடியும்? தியாக வாழ்க்கைதானே ஆசிரியர் வாழ்க்கை என்று பசியால் வாடுகிற ஆசிரியர்களிடம் தத்துவம் பேச முடியாது. வறுமையால் களை இழந்து நிற்கும் ஆசிரியர்கள், எப்படிக் கனவு தேசத்திற்கான மாணவர்களை உருவாக்க முடியும்?

"தடைகளைத் தாண்டிச் சென்றால் உங்களால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற முடியும். பொருளாதாரத்தில் உயர்ந்து பணக்காரனாக முடியும்" என்று வறுமையான சூழ்நிலையில் இருந்து கொண்டு ஓர் ஆசிரியர், மாணவர்களிடம் அறிவுரை கூறினால் அந்த அறிவுரையில் உயிரோட்டம் இருக்குமா?

அப்படி உயிரோட்டம் இல்லாமல் போவதற்கு யார் காரணம்? ஒட்டுமொத்தச் சமூகமும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய பழி இது.

என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஆசிரியர் சமூகம் வளமையும் வலிமையும் பெறவேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களை ஆதரிக்க நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக முன்வரவேண்டும். பெற்றோர்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள் எல்லோரும் தங்களது ஊதியத்தில் இருந்து ஒரு தொகையைத் தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலனுக்காக ஒதுக்கவேண்டும். அரசும் ஒரு குறிப்பிட்ட தொகையை தனியார் பள்ளி ஆசிரியர் நலனுக்காக வழங்க வேண்டும்.

இதை ஏதோ நல நிதி என்றோ, நிவாரண நிதி என்றோ, கருணைத் தொகை என்றோ கருதக்கூடாது. நம்முடைய ஆசிரியர்களுக்குக் கொடுக்கக்கூடிய குருதட்சணையாகக் கருதி வழங்க வேண்டும். ஏனென்றால் ஆசிரியர்கள் நம் தேசத்தின் குழந்தைகளுக்காகக் கற்பிக்கிறார்கள்.

புத்தக வாசிப்பு

அதேபோல தனியார் பள்ளிஆசிரியர்கள், தங்களுக்கு வழங்கப்படும் நிதியின் ஒரு பகுதியை தங்கள் பாட சம்பந்தமான அறிவை வளர்த்துக்கொள்ளவும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் நூல்களை வாங்கிப் படிக்கச் செலவிட வேண்டும். நவீன தொழில்நுட்பங்களையும், கற்பித்தல் முறையில் புகுத்தப்பட்டிருக்கும் மாற்றங்களையும் குறிப்பிட்ட தொகையைச் செலவு செய்து கற்றுக்கொள்ள வேண்டும். வேண்டுமானால் அவர்களுக்கு வழங்கப்படும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்குப் புத்தகங்களை வழங்கலாம். வீட்டில் இருக்கக்கூடிய ஆசியர்கள் இன்னும் இருக்கக்கூடிய விடுமுறை நாட்களை புத்தகங்கள் வாசிப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நவீன தொழில்நுட்பங்கள் மட்டுமல்லாமல் நமது தேசத்தின் மாண்புகளையும் பாரம்பரியங்களையும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் பழமையான விஞ்ஞான அறிவு உலகிற்கே வழிகாட்டக்கூடியதாக இருந்திருக்கிறது என்பதையும், வானியல் மருந்தியல், உடற்கூறு இயல் போன்ற துறைகளில் தேர்ந்திருந்த நமது நாட்டின் விழுமியங்களையும் ஆசிரியர்கள் தெரிந்துகொள்வது எதிர்காலக் கற்பித்தலலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு நாம் உதவ வேண்டும்.

அறிவு வெளிச்சம் பாய்ச்சும் ஆசிரியர்கள் வருமானம் இல்லாமல் இருளில் சிக்கிக் கிடப்பது என்பது ஆபத்தான நிகழ்வு. அவரவர் சார்ந்த பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவித்தொகையை இல்லை... இல்லை... தட்சணையை நேரடியாக வழங்கலாம்.‌

ஆசிரியர்களின் நலனுக்காகச் செய்யப்படுகிற உதவி என்பது எதிர்காலச் சமூக வளர்ச்சிக்கான முதலீடு என்பதை எல்லோருமே உணர்ந்து செயல்பட வேண்டும்.

பெருந்தொற்றுக் காலத்தில் முன்களப் பணியாளர்களாக நின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு எப்படித் தாமாக முன்வந்து ஆதரவு அளித்தோமோ அதுபோல தனியார் பள்ளி ஆசிரியர்களையும் ஆதரிக்க நாம் முன் வரவேண்டும். ஏனென்றால் நோய்த்தொற்றுக் காலத்தில் மட்டுமல்ல எப்போதுமே அறிவு வளர்ச்சிக்கான முன்களப் பணியாளர்களாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான்.

- முனைவர் ஆதலையூர் சூரியகுமார்,

ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினர்,

பெரியார் பல்கலைக்கழகம்,

சேலம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x