Published : 30 Nov 2020 06:17 PM
Last Updated : 30 Nov 2020 06:17 PM

கற்றலுக்கு மொழி தடையாகக் கூடாது; தொழில்நுட்பக் கல்வியில் தாய்மொழி அவசியம்: ஐஐடி காரக்பூர் இயக்குநர் வேண்டுகோள்

பள்ளிகளில் மட்டுமல்லாது கல்லூரிகளிலும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழிக் கொள்கை அவசியம் என்று ஐஐடி காரக்பூர் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ஐஐடி காரக்பூர் இயக்குநரும், பேராசிரியருமான திவாரி, ''தொழில்நுட்பக் கல்வியில் தாய்மொழியைப் பின்பற்றுவது அவசியமான இலக்கு ஆகும். பள்ளிகளில் மட்டுமல்லாது கல்லூரிகளிலும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழிக் கொள்கை அவசியம். இதன்மூலம் கற்றலுக்கு மொழி தடையாக அமைவது தவிர்க்கப்படும்.

இதற்கு முதலில் பிராந்திய மொழியில் பாடம் கற்பிக்கும் வல்லமை வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம். அதேபோல பாடப்புத்தகங்கள், மேற்கோள் நூல்கள் ஆகியவையும் பிராந்திய மொழியில் கிடைக்கவேண்டும். இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் ஆடியோ மொழிமாற்றியையும் துணைக்கு வைத்துக் கொள்ளலாம்.

சிறுவயதில் இருந்து நாம் சிந்தித்த மொழியில் படிக்கும்போது மனித மூளை இன்னும் வேகமாகச் செயல்படும். ஆங்கிலத்தைப் புகுத்தும்போது கற்றல் செயல்முறை தாமதமாகும்.

இதை ஆய்வகங்களில், செயல்முறை வகுப்புகளின்போது எளிதாக உணர்ந்துகொள்ளலாம். ஆய்வக ஊழியர்கள், மாணவர்களின் மொழியில் உரையாடும்போது அவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவுமுறை எளிதில் வளர்கிறது'' என்று திவாரி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் கல்வி முறைமாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை அறிமுகம் செய்ய மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, வரும் 2021-22 ஆம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். இதற்காக சில ஐஐடி, என்ஐடி உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x