Last Updated : 28 Nov, 2020 06:16 PM

 

Published : 28 Nov 2020 06:16 PM
Last Updated : 28 Nov 2020 06:16 PM

கோவை அருகே அரசுப்பள்ளிக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தைத் தானமாக வழங்கிய தொழிலதிபர்: தந்தை வழியில் மகனும் உதவி

எலச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொழிலதிபர் ராமமூர்த்தி

கோவை

கோவை எலச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியைத் தரம் உயர்த்த அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.

கோவை கருமத்தம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் படிக்க ஏதுவாக 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 174 மாணவர்கள் படித்து வருகின்றனர். இடப்பற்றாக்குறை நிலவி வந்ததால் உயர் நிலைப்பள்ளியாக அப்பள்ளி தரம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இதனால் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமெனில் மாணவர்கள் 15 கிலோமீட்டர் பயணித்து அரசூர், தெக்கலூர், சூலூர் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

எனவே, அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் இணைந்து பள்ளியைத் தரம் உயர்த்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அரசுத் தரப்பை அனுகியபோது, இடம் இருந்தால் கட்டிடத்தைக் கட்டிக்கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தியிடம் தெரிவித்தவுடன், அவர் தனக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்புள்ள 1.50 ஏக்கர் நிலத்தைத் தானமாக எழுதிக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து எலச்சிபாளையம் கிராம மக்கள் கூறுகையில், "கருமத்தம்பட்டி பேரூராட்சிப் பகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். இருப்பினும், அரசு உயர்நிலைப்பள்ளி இல்லாததால் எலச்சிபாளையத்தில் பள்ளியைத் தரம் உயர்த்தத் தொடர்ச்சியாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். தொழிலதிபர் ராமமூர்த்தியிடம் தெரிவித்தவுடன் நடுநிலைப் பள்ளிக்கு அருகே 1.50 ஏக்கர் பரப்பளவிலான தனது நிலத்தை வழங்கி உயர் நிலைப்பள்ளி கட்ட ஆவன செய்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம், தொலைவில் உள்ள பள்ளிகளுக்குத் தங்கள் குழந்தைகள் சென்று வீடு திரும்பும் வரை அச்சத்துடனேயே பெற்றோர் இருக்கும் சூழல் தவிர்க்கப்படும். இடத்தைத் தானமாக அளித்த ராமமூர்த்திக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஊர் மக்கள் சார்பில் நாளை (நவ.29) பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். இடம் கிடைத்துள்ளதால் உயர் நிலைப்பள்ளியாக உடனே தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

நடுநிலைப்பள்ளிக்கு அருகே தொழிலதிபர் ராமமூர்த்தி தானமாக வழங்கிய நிலம்

தந்தை வழியில் மகனும் உதவி

இதுகுறித்துத் தொழிலதிபர் ராமமூர்த்தி கூறுகையில், "எலச்சிபாளையம் கிராமம் விவசாயம் மற்றும் விசைத்தறித் தொழிலைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. இங்கு குழந்தைகள் படிப்பதற்காக 1957-ல் என்னுடைய தந்தை பள்ளிக்கு நிலத்தைத் தானமாகக் கொடுத்து, பள்ளியும் கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது மாணவர்களின் படிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளதால் கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இல்லாததால் அதைக் கட்ட கிராம மக்கள் முயற்சிகள் மேற்கொண்டுவந்தது குறித்து என்னிடம் தெரிவித்தனர்.

அதன்படி நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கி உள்ளேன். இதனால் இந்தப் பகுதியில் உள்ள மாணவர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் கல்வி பயில முடியும். இந்த இடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு, இங்கு பயிலும் மாணவர்கள் வாழ்வில் முன்னேறினால் அதுவே எனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும். மேலும் பள்ளிக்காக நிலம் வழங்க எனக்கு வாய்ப்புக் கொடுத்த கிராம மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பள்ளிக்குத் தேவையான உதவிகளை இயன்றவரை செய்யத் தயாராக உள்ளேன்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x