Last Updated : 20 Nov, 2020 03:38 PM

 

Published : 20 Nov 2020 03:38 PM
Last Updated : 20 Nov 2020 03:38 PM

எம்பிஏ, எம்சிஏ கலந்தாய்வுகளில் நிரம்பாத 14,311 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காப்பாற்றப்படுமா?- கல்லூரிகளில் விண்ணப்பம் பெற்றுப் பூர்த்தி செய்யக் கோரிக்கை

எம்பிஏ, எம்சிஏ கலந்தாய்வுகளில் நிரம்பாத 14,311 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வீணாகாமல் காப்பாற்ற, முதுநிலைப் படிப்புகளுக்கு கல்லூரிகளில் விண்ணப்பம் பெற்று இடங்களைப் பூர்த்தி செய்வதைப் போல், இந்த இடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புபவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம். இதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தால் டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி) மூலமாக எம்பிஏ, எம்சிஏ இணையவழிக் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

எம்சிஏ படிப்புக்குக் கடந்த நவ.6 மற்றும் 7-ம் தேதிகளிலும், எம்பிஏ படிப்புக்கு நவ.10-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு கடந்த 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் 3,647 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்துத் தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைச் செயலரும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருமான பி.தாமரை கூறும்போது, ''எம்பிஏ, எம்சிஏபடிப்புகளுக்கு இரு கட்டங்களாக இணையவழிக் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. டான்செட் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசை மற்றும் இன சுழற்சி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

எம்பிஏ படிப்பில் 12,996 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 5,384 பேர் விண்ணப்பித்தனர். 2,795 பேர் கல்லூரிகளைத் தேர்வு செய்து சேர்ந்தனர். எம்சிஏ படிப்பில் 4,962 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதற்கு1,671 பேர் விண்ணப்பித்து, 852 பேர் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இரு படிப்புகளிலும் 3,647 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 14,311 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன'' என்றார்.

இது குறித்து அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் கழக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ''அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்து மாணவர்களும் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று நோக்கத்தில்தான் டான்செட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக இருப்பது கவலை அளிக்கிறது.

அதே நிலைதான் இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களைக் காலியாகவே விடுவது சரியாகாது. முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அந்தந்தக் கல்லூரிகளிலேயே விண்ணப்பம் பெற்று, மாணவர் சேர்க்கை நடத்துவதைப் போல, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.

இதற்கு டான்செட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம். இதனால் மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு உருவாகும். இதேபோல் அரியர் மாணவர்களும் தேர்வு முடிவுகளை அறிந்த பின்னர், இந்தப் படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருவதால், வரும் கல்வியாண்டுகளில் பொது நுழைவுத்தேர்வு, பொதுக் கலந்தாய்வைத் தவிர்த்து, கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் போதே, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தலாம். இது குறித்துத் தமிழக உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x