Last Updated : 20 Nov, 2020 11:50 AM

 

Published : 20 Nov 2020 11:50 AM
Last Updated : 20 Nov 2020 11:50 AM

வேளாண்மைப் பட்டப்படிப்புகள்: இணையவழிக் கலந்தாய்வுத் தேதி அறிவிப்பு; கலந்தாய்வு நடைமுறைகள் விவரம்

கோவை

வேளாண்மைப் பட்டப் படிப்புகளுக்கான இணையவழிக் கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்துத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக டீன் எம்.கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு இணையவழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப் பிரிவினருக்கு வரும் நவ.26 முதல் 28-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு விவரம் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்பு மூலமாகத் தெரிவிக்கப்படும்.

நவ.30-ம் தேதி முதல் டிச.1-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்குக் கலந்தாய்வு நடைபெறும். இதில் தொழிற்கல்வி படித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள வேண்டும்.

டிச.7-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாளொன்றுக்கு 600 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின் தற்காலிக இட ஒதுக்கீட்டுக் கடிதம் வழங்கப்படும்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைமுறைகள்

* கலந்தாய்விற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்குக் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

* இவ்வாறு தகவல் கிடைக்கப்பெற்றவர்கள் https://tnauonline.in என்ற இணையதளத்தில் தங்களுடைய பயனீட்டாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்திக் கலந்தாய்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பொதுப் பிரிவினருக்கு ரூ.3,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ரூ.1,500 செலுத்த வேண்டும்.

* கலந்தாய்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் தங்களுடைய கல்லூரி மற்றும் பாடப்பிரிவை மறுதேர்வு செய்யலாம். இதை நவ.26 முதல் 28-ம் தேதி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

* ஒவ்வொரு முறையும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவிற்கான விருப்பத் தேர்வைச் செய்தவுடன் அதை 'Save' செய்ய வேண்டும். விருப்பத் தேர்வை முடித்தவுடன் 'Submit preference' என்ற சொல்லை அழுத்தி விருப்பத் தேர்வை உறுதி செய்ய வேண்டும். அதன் பின்னர் மீண்டும் தேர்வு செய்ய இயலாது.

* மேற்கண்ட மூன்று நாட்களில் விருப்பத்தேர்வை மாற்றவில்லை எனில் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தேர்வே இறுதியானதாக எடுத்துக் கொள்ளப்படும்.

* இதற்கான முடிவுகள் டிச.2-ம் தேதி இணையதளம் வாயிலாகத் தெரிவிக்கப்படும். இம்முடிவுகளை இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

* கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்பட்ட மாணவர்கள் இணையதளம் வாயிலாக ரூ.20,000 செலுத்தி தங்களுடைய இட ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* அசல் சான்றிதழ் சரிபார்ப்புத் தேதி மற்றும் நேரம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

* அந்த நாட்களில் மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் குறிப்பிட்ட நேரம் மற்றும் நாட்களில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

* சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின் தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

* இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் தங்களுடைய விருப்பத் தேர்வினை மாற்றி அமைத்துக் கொள்ள நகர்வு முறைக்கான விருப்பத்தினைப் பதிவு செய்யவேண்டும்.

* நகர்வுமுறை மாணவர்களுடைய விருப்பத் தேர்வில் ஏற்கனவே கிடைக்கப் பெற்ற தேர்விற்கு மேல் நோக்கியே நகரும்.

* கலந்தாய்வில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது.

* இடம் ஒதுக்கப்படாத மாணவர்கள் அடுத்தடுத்தக் கலந்தாய்வில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x