Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்; கலந்தாய்வு விரைவில் தொடக்கம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை தலைமைச் செயலகத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார். உடன் துறை செயலாளர் டாக்டர் கே.கோபால், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.பாலசந்திரன்.

சென்னை

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாணவி தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள பிவிஎஸ்சி-ஏஹெச், பி.டெக். படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இப்படிப்புகளுக்கு மொத்தம் 15,580 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. பரிசீலனைக்கு பின்னர் பிவிஎஸ்சி-ஏ.ஹெச் படிப்புக்கு 11,246 (தொழில் கல்விக்கு 137 விண்ணப்பம் உட்பட), பி.டெக் படிப்புகளுக்கு 2,518 என மொத்தம் 13,901 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இப்படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். துறைச் செயலாளர் கே.கோபால், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.பாலச்சந்திரன், பதிவாளர் பி.தென்சிங் ஞானராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பெ.குமாரசாமி உடன் இருந்தனர்.

பிவிஎஸ்சி-ஏஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்ட மாணவி எஸ்.விஷ்ணுமாயா நாயர் (கட்-ஆப்மதிப்பெண் - 199.25), சேலம் மாவட்ட மாணவர் ஜே.சுந்தர் (198.50), கோவை மாவட்ட மாணவி ஜி.கோகிலா (197.51) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். பி.டெக் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் தருமபுரி மாவட்ட மாணவி எஸ்.சிவகனி (192), நாமக்கல் மாவட்ட மாணவி வி.பி.ரிதி (192), விழுப்புரம் மாவட்டமாணவி பி.நிவேதா (191.50) முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.

3 புதிய கல்லூரிகள்

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பெ.குமாரசாமி கூறும்போது, “தரவரிசைப் பட்டியல் www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்ததும், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கப்படும். விரைவில் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும். இந்தஆண்டு சேலம் தலைவாசல், தேனி வீரபாண்டி, உடுமலைப்பேட்டையில் தலா 40 இடங்களுடன் புதிதாக 3 கல்லூரிகள் செயல்படவுள்ளது. இந்த 120பிவிஎஸ்சி - ஏ.ஹெச் இடங்களுக்கும் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை நடைபெறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x