சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பே பொதுத் தேர்வுகள்?- தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பே பொதுத் தேர்வுகள்?- தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகே பள்ளிப் பொதுத் தேர்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான கால அட்டவணையைத் தேர்வுத் துறை அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் பள்ளிக்கல்வியில் கற்றல் கற்பித்தல் பணியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பள்ளிகள் திறப்பில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை வழங்க பள்ளிக் கல்வித்துறை முன்னாள் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு சார்பில் பல்வேறுகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து கருத்துகளும் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முதல்கட்டப் பரிந்துரை அறிக்கை, முதல்வர் பழனிசாமியிடம் கடந்த ஜூலை 14-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இணையவழிக் கல்விக்கு நேரக் கட்டுப்பாடு விதித்தல், மாணவர் சேர்க்கைப் பணிகள் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன.

இதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு மற்றும் பாட அளவு குறைப்பு, பொதுத் தேர்வு தொடர்பான 2-ம் கட்ட அறிக்கையை நிபுணர் குழு, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

இந்நிலையில் அந்த அறிக்கையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகே 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கரோனா காரணமாகத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு தாமதமாகிக் கொண்டே வரும் சூழலில், ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் கல்வியைக் காட்டிலும் மாணவர்களுக்குப் பள்ளிகளில் நேரடிக் கற்பித்தல் முறை அவசியம் என்பதால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வை நடத்த முடியாது என்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் 10, 11, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்றும் அரசுக்குத் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in