Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

எம்சிஏ கலந்தாய்வில் 813 இடங்கள் மட்டுமே நிரம்பின: 4,149 இடங்கள் காலியாக உள்ளன

எம்சிஏ படிப்புக்கான கலந்தாய்வில் 813 மாணவர்கள் மட்டுமேகல்லூரியை தேர்வு செய்துள்ளதால், 4,149 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழக கல்லூரிகளில் உள்ளஎம்சிஏ படிப்புக்கான இடங்கள் டான்செட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு கடந்த பிப்.29-ம் தேதி நடந்தது. இதில், எம்சிஏவுக்கான தேர்வை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த மே 19-ம் தேதி வெளியானது.

இதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பகல்லூரி, எம்சிஏ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விண்ணப்பத்தை இணையவழியில் தொடங்கியது. அதன்படி, 1,800-க்கும்மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், 1,671 பேரின் விண்ணப்பம்தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, தமிழக கல்லூரிகளில் எம்சிஏ படிப்புக்கான 4,962 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 6-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி முடிவடைந்தது. இதில், மொத்தம் 813 மாணவர்கள் மட்டுமே தங்களுக்கான கல்லூரியை தேர்வு செய்துள்ளனர். இதனால், மொத்தம் 4,149 இடங்கள் காலியாகவே உள்ளன. டான்செட் தேர்வில் 1 மதிப்பெண்ணுக்கும் குறைவாக எடுத்தவர்களுக்கும் அரசுமற்றும் முன்னணி தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. 10 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்றவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.

பல்கலைக்கழக தேர்வு முடிவுவெளியாகாத நிலையில் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்தது. பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், விண்ணப்ப கட்டணம், கல்லூரி நுழைவுக் கட்டணம் வீணாகிவிடுமே என்ற சந்தேகத்திலேயே பலரும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவில்லை. இதனால், கலந்தாய்வை தள்ளிவைக்கும்படி உயர்கல்வித் துறைக்கு கல்வியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், கலந்தாய்வுக்கு 1,671 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 813 பேர் மட்டுமே கல்லூரியை தேர்வு செய்துள்ளது உயர்கல்வித் துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், விண்ணப்ப கட்டணம், கல்லூரி நுழைவுக் கட்டணம் வீணாகிவிடுமே என்ற சந்தேகத்திலேயே பலரும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x